பக்கம்:பாலைப்புறா.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாலைப்புறா

166

‘சுகமா... இருக்கீங்களா சார்’.

"சுகமாவே இருக்கேம்மா... நீ... சாரி... நீங்க முன்னால நின்று அடிக்கல் நாட்டுனீங்களே... மருத்துவமனை. இன்றைக்கு அதே இடத்தில் ஒரு கொட்டகையில் தற்காலிக மருத்துவமனை துவங்குது... அதுக்காகத்தான் நான் வந்தேன். போகிற வழிதானே... ஒன்னையும் பார்த்துட்டு போகலாமென்னு வந்தேன். திறப்புவிழா முடிஞ்சதும், பீல்ட் பப்ளிசிட்டி ஆபீசரும் ஒங்களைப் பார்க்க வரணுமுன்னார். அவர் ஜீப்லதான் நான் போகணும், ஆனால் அவரை வரவிடாமல் தடுக்கப் போறதுக்கு மன்னிக்கணும் நான் வாறேம்மா...திக்கற்றோருக்கு தெய்வந்தான் துணை’.

குமாரவேல், எவரையும் பார்க்காமல், சொந்த மகன்போல் உரிமை கொண்டாடிய சீனியம்மாவையும் பார்க்காமல், திரும்பிப் பாராமலே போனார். கலைவாணியால், வெறுமனே தலையாட்டத்தான் முடிந்தது... அந்த தலையைக் கூட மெல்ல ஆட்டினாள். இல்லையானால், கண்ணீர்தான் உதிரும்... அதுவே, கடந்த கால காதலின் அத்தாட்சிகளாகக் கருதப்படலாம்... எல்லோருமே சீதாலட்சுமிகளாய் ஆகிவிட்டார்கள்.

கலைவாணி, குமாரவேல் போனதும், ஒரு நிமிடம் கூட திண்ணையில் நிற்காமல், அறைக்குள் வந்தாள். கட்டிலில் முடங்கிக் கொண்டாள். முந்தானையே முக்காடானது. அந்த அறையே சமாதியானது. அவளும் இரண்டு நாட்களாகப் பார்த்துக் கொண்டுதான் வருகிறாள். ஒரே தட்டில் சாப்பிடும் பலராமன், சிறிது எட்டி நின்றே சாப்பிடுகிறான். தோளில் கை போட்டுப் பேசும் அண்ணிகூட, சிறிது விலகி நின்றே பேசுகிறாள். ஆளுக்கு ஆள், தினம் தினம் இடம் மாறும் சாப்பாட்டுத்தட்டுக்களில் கூட, அவளுக்கு இப்போது ஒரே தட்டுதான் வருகிறது. பல்லாங்குழிகள் மாதிரி மூன்று மேடுகளைக் கொண்ட தட்டு. அண்ணிகூட, இவள் சாப்பிட்ட தட்டைக் கழுவுவதில்லை. இவளிடமே செம்பு நிறைய வெந்நீர் கொடுத்து கழுவச் சொல்கிறாள். விஞ்ஞான ரீதியில் பார்த்தால், இதில் தப்பில்லைதான். ஆனால், இதிலெல்லாம் ஒரு அந்நியத்தன்மை இருப்பது போல் பட்டது. உறவாடுவது ஒரு உரிமை என்பது போய்... அதுவே ஒரு கடமை என்பது போலாகி விட்டது. இந்தக் கடமை சுமையாக, அந்த சுமையும் தலையிலிருந்து கீழே விழ, எவ்வளவு நாளாகுமோ...!

கலைவாணி குமைந்தாள். இதற்குள், அம்மா உள்ளே வந்தாள். கருவாய் சுமந்தவளுக்கு, அந்தக் கருவின்உருவத்தில் புரையோடிய உணர்வுகள் புரிந்து விட்டன. வலது கையை வளையல் மாதிரி நீட்டி, அதில் மூன்று முழ மல்லிகைப்பூவை தொங்கப்போட்டு வந்தாள். ஆறுதலாய் பேசினாள்.

‘ஒரேயடியாய் வீட்டுக்குள்ளயே அடஞ்சி கிடந்தால், பைத்தியம் தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/166&oldid=1405203" இலிருந்து மீள்விக்கப்பட்டது