பக்கம்:பாலைப்புறா.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அந்த வீட்டு தொலைக்காட்சிப்பெட்டி, பிரதமர் வி.பி. சிங்கின் தமிழக சுற்றுப்பயண நிகழ்ச்சிகளைக் காட்டிக் கொண்டிருந்தது. ‘டுயாங்.. டுயாங்’ பின்னணி இசை செய்தி வாசிப்பல்ல; தொகுப்புரை. இசைஒலிக்காத போது, காதைச்சுற்றி சுற்றி மூக்கைத் தொடும் தமிழில் ஒரு வர்ணனை.

இந்த வெள்ளையன்பட்டிக்கு என்று ஒரு கின்னஸ் புத்தகம் எழுதப் பட்டால், இந்த வீட்டுத் தலைவர் சுப்பையாவும், அவரைத் தூண்டிவிட்ட மகள் கலைவாணியும், முதல் பக்கத்தை நிரப்புவார்கள். அட்டைப்படமாகக் கூட ஆகலாம். ஒரு வருடத்திற்கு முன்பு இந்த ஊருக்குள் முதலாவதாக நுழைந்த தொலைக்காட்சிப் பெட்டி இதுதான். அதற்குப் பிறகு இந்த அரண்மனை வீடே, கிட்டத்தட்ட சினிமா தியேட்டராகி விட்டது. அவரவர் அந்தஸ்துகளுக்கு ஏற்ப வெறுந்தரையான முற்றம், பெஞ்சுகளைக் கொண்ட உள் திண்ணை, சில நாற்காலிகளைக் கொண்ட உள்ளறை என்று ரசிகர்கள் தரம் பிரிக்கப்பட்டாலும், இதுவரை கட்டணம் வசூலிக்கப்படாத வீடியோ வீடுதான்.

இந்த பெருமைமிக்க பெட்டிக்கு தொலைவில், பத்துப் பதினைந்து பெண்கள், வட்டமடித்து உட்கார்ந்து இருந்தார்கள். வாடிக் கொண்டிருக்கும் செடிஒன்று, காலத்தின் கனிவால், தன்னைத்தானே புதுப்பித்துக்கொண்டிருப்பது போன்ற தோற்றம். ஒரே ஒரு பாம்படக்காரி.... மூன்று அச்சடி சேலைகள்; ஐந்தாறு உல்லி உல்லிகள்; இரண்டு சல்வார்கமிஷ் மொட்டுக்கள்; பல்வேறு வண்ணங்களிலான இதழ்களையும், அதே சமயம் அடிவாரத்தில் வாடிப் போன இலைகளையும் கொண்ட ஒரு அதிசயப் பூ கண்டுபிடிக்கப்பட்டது போன்ற பெண் வட்டம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/19&oldid=1404941" இலிருந்து மீள்விக்கப்பட்டது