பக்கம்:பாலைப்புறா.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34 பாலைப்புறா

“மூடப்பயலே கட்டையில போறவனே...இன்னும் நாங்க சாகணுமா? இதுவரைக்கும் செத்தவளுக போதாதா?”

சில பெண்கள், கையில் மண்ணை அள்ளிக் கொண்டு ராமசுப்பு பக்கம் ஒடினார்கள். அவர் அரண்டு போனார். இதுவரை காணாத எதிர்ப்பு. ஊரில் தனக்கு செல்வாக்கு இருப்பதாய் அனுமானித்த எண்ணத்தில் மண்விழுந்தது போல், தலையில் செம்மண்துகள்கள், எவளோ ஒருத்தியின் கையில் இருந்து, கொஞ்சம் கொஞ்சமாய் விழுந்தன. அடிபடப் போனவரை, தவசிமுத்துதான் இழுத்துக் கொண்டு ஓடினார். ஓடும் போதே ஒரு உபதேசம் 'ஒரேயடியாய் தன்னந்தனியாய் அமுக்கப்படாதுப்பா’. 'பலாப்பழத்தை முழுசா சாப்பிடலாம். ஆனால் அப்படியே முழுங்க முடியுமா? இனிமேல் எதையும் அமுக்கணும். அபகரிக்கணுமுன்னு வந்தால் என்னையும் சேர்த்துக்கோ.. சீக்கிரமா ஒடு...’

கலைவாணியோ, அவளது தோழிகளோ இப்படிப்பட்ட ஆதரவை எதிர்பார்க்கவில்லை. பிரமித்து நின்றார்கள். சுற்று முற்றும் தத்தம் சொந்தக்காரர்கள், பெருமிதமாய் பார்ப்பதைப் பார்க்காமலே நின்றார்கள். பலராமன் வந்தபோது மட்டும், அவனை உள்ளுர் ரஜினிகாந்த்தாக நினைத்து, மீரா, உற்சாகமாக கைதட்டினாள். மீரா மட்டுமே.

கலைவாணிக்கு பிரக்ஞை வந்தது. டெம்போக்காரன் போயிட்டான். ‘என்ன செய்யுறது...எப்படி மேடை போடுறது, கையும், காலும் ஓடலியே’.

கலைவாணி, உள்ளுர் விவேகிகளிடம் ஓடினாள். நிலைமையை எடுத்துச் சொன்னாள். அவ்வளவுதான்... அவர்கள் உரக்கவே சத்தம் போட்டார்கள்.

‘கூட்டத்தை நடத்தியே ஆகணும். இந்த வெள்ளையன்பட்டி, பக்கத்து பட்டிகளுக்கு இளக்காரமாயிடப் படாது. டேய் மாரி... பனங் கம்புகளை நடுடா, சீமைச்சாமி... இந்தக் கம்பியை எடுத்து குழிதோண்டு. அடே பெருமாள் ஏமுல பிள்ளைத்தாச்சி மாதிரி வயித்த நெளிக்கே. என் வீட்டுலே போய் டிரக் வண்டியை இழுத்துட்டுவா... அதுதான் மேடை... இந்தப் பாரு மொள்ளமாரி அருணாசலம், ராமசுப்பு செளக்குத் தோப்புல போய், பத்துப் பதினைஞ்சு மரத்தை வெட்டிட்டு வா. கூடமாட வாரவன்ல ரெண்டு பேரை ராமசுப்பு வாழைத் தோப்புல ரெண்டு தலைவாழையை வெட்டிட்டு வரச் சொல்லு, உப்பத் தின்னவன் தான் தண்ணி குடிக்கணும்.' ‘ஏல குடிகாரா! கோணச் சத்திரத்தில் போயி பட்டாசு வெடி வாங்கிட்டு வா. என் வீட்ல தொழுவம் அடைக்க தென்னந்தட்டிக வச்சிருக்கேன். மயினிக்கு தெரியாம ஒசப்படாமல் தூக்கிட்டு வா'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/34&oldid=1404980" இலிருந்து மீள்விக்கப்பட்டது