பக்கம்:பாலைப்புறா.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 33

ராமசுப்பு, கம்பு முளையை கழட்டிக் கொண்டு ஓடிய ஒரு எருமை மாட்டை இழுத்தபடியே, 'தலைக்குமேல தண்ணீர் போன பிறகா' என்றார். அந்தப் பேச்சோடு பேச்சாய், 'ஏடா. மந்திரம் -அந்த டெம்போக்காறனுக ஏன் நிற்கான்னு அரிவாளோடு போய்க் கேட்டுட்டு வா’ என்றார்.

'லூசனான' மந்திரம், அரிவாளைத் தூக்கியபடியே ஒடியபோது, அந்த டெம்போவும் ஒடியது. திரும்பிப் பாராமல் ஓடியது. அத்தனை பெண்களும், கலைவாணியை அங்கேயே விட்டு விட்டு, டெம்போ பின்னால் ஓடி, கருப்பிகள் கூட சிவப்பானார்கள். கலைவாணிக்கு என்ன செய்கிறோம் என்பது புரியவில்லை. ஆவேசமாய் ஓடி, ஓலையும், அரிவாளுமாய் நின்ற ராமசுப்புவின் கையைப் பிடித்துக் கொண்டாள். அழுகை அழுகையாய் வந்ததை ஆத்திரம் ஆத்திரமாய் மாற்றிக் கொண்டாள். ராமசுப்பு, தவசிமுத்துவிடம் முறையிட்டார்.

"தவசி. ஒன் மருமகள விடச் சொல்லு. இல்லன்னா பொம்புளைய அடிச்சேன்னு எனக்கு கெட்டப் பேர்வரப்படாது."

"எனக்கும் சின்னப்பையன், பெரிய மனுஷனை கை வச்சுட்டான்னு பேர் வரப்படாது".

எல்லோரும் திரும்பிப் பார்த்தால், கலைவாணியின் தம்பி பலராமன்; பதினெட்டு வயதிருக்கும். பிளஸ் டு பெயிலு. பார் விளையாடுறதும், பஸ்கி எடுக்கிறதும் அவன் தொழில். இப்போது கோணச் சத்திரத்தில், கராத்தே கற்றுக் கொள்வதாக கேள்வி. டியூட்டோரியல் காலேஜுக்கும் போகிறான் என்பது பேரு, போவதோ கராத்தே கூடத்துக்குத்தான், என்பதாகச் செய்தி.

ராமசுப்புவும் விடவில்லை. கலைவாணி இறுக்கிப்பிடித்த கையாலயே, வேட்டியைத் தார் பாய்த்து, பலராமனை, பகைப் பார்வையாய்ப் பார்த்தார். அதற்குள், ஊரில் இருந்தும், அந்தக்கப் பிச்சாலைக்கு வடகிழக்கே உள்ள சேரியில் இருந்தும் ஒரே கூட்டம். ஆண்கள், அந்தக் கூட்டத்திலேயே காணாமல் போனது போன்ற பெண்கள் கூட்டம். சிலர் கைகளில், துடைப்பக் கட்டைகள் கூட இருந்தன.

கொட்டகை கம்புகள் கீழே விழுந்தன. மூங்கில் தட்டிகள் பாதிப் பாதியாய் சுருண்டன. ஒலைத் தட்டிகள், நொறுங்கின. அங்கும், இங்கும் கைகளும், கால்களும் அசைந்தன. அசைந்து அசைந்து அத்தனையும் நகர்ந்தன. வெறுமையாய் நின்ற இரண்டு பனைமரத்தூண்களை, நான்குபேர் ஆட்டி ஆட்டி, மேலே கொண்டு வந்து கீழே போட்டு ‘தூ’ என்று துப்பினார்கள். கூட்ட மிரட்டலில் எருமை மாடுகள், அங்குமிங்குமாய்த் துள்ளின; சில கயிறோடு ஓடின. சில முளையோடு ஆடின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/33&oldid=1404979" இலிருந்து மீள்விக்கப்பட்டது