பக்கம்:பாலைப்புறா.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36 பாலைப்புறா

சிறிது நேரத்தில், ஒரு கண்டசாகார் வந்தது. அதற்குப்பின்னால் ஒரு கார். இன்னும் ஒரு ஜீப்.

கலைவாணியை முந்தி, ஆனந்தி கதவைத் திறந்தாள். சுருட்டைத் தலைமுடி கொண்ட நாற்பது வயது பெண். பாறைகளில் ஈரப் பசும்புல் படர்ந்தது மாதிரியாக வளவளப்பான தலை. முழங்கால் வரை நீண்ட ஸ்கர்ட்... காக்கா பொன்போன்று மின்னும் கறுப்பு. திருஷ்டி பரிகாரமாய் தடித்த உதடுகள்; பாம்படம் போட்ட கனகம்மா, சந்தன மாலையைப் போட்ட போது, அந்தம்மா, அவள் கையைப் பிடித்துக் கொண்டு, விடவே இல்லை. பாம்படங்களை தொட்டுத் தொட்டுப் பார்த்துவிட்டு, சொந்த ஊருக்கு வந்திருப்பது போல், முகம் மலர்ந்தாள். அதே கண்டசா காரில் இருந்து மறுபக்கமாய் இறங்கிய ஒரு டை கட்டி ஜென்டில்மேன், ஏதோ சொல்ல, மேடம், மேடையைப் பார்த்து நடந்தாள். கலைவாணி, ஆனந்தி வகையறாக்கள் இருபக்கமும் நடந்தார்கள். காமா சோமாவாய் மேடை போட்டிருப்பதற்கு கலைவாணி வருத்தம் தெரிவிக்கப் போன போது, அந்த மேடையை அதிசயித்துப் பார்த்த மேடம், டைகாரனிடம் எதையோ சொல்லும்படி சொல்ல, அவரும் வாய் கொள்ளாச் சிரிப்போடு நின்ற மேடத்தைச்சுட்டிக்காட்டி, இப்படிச் சொன்னார்.

‘போகிற இடத்துல எல்லாம், ஏ.ஸி மண்டபங்களையும், சாமியானா பந்தல்களையும் பார்த்து, ஒரு செயற்கைத் தனத்தால் வருத்தப்படும் அம்மாவுக்கு, இந்த மேடையைப் பார்த்ததும் சந்தோஷமாம். இங்கேதான் மண்வாசனை தெரியுதாம். அதோடு பந்தலின் அடிவாரத்தில் உள்ள நாட்டுப்புறக்கலை வேலைப்பாடு காணக் கிடைக்காத அதிசயமாம். இந்த மாதிரியான கிராம ஒற்றுமையை வேறு எங்கேயும் பார்க்க முடியாதாம்...’

ஒரே கைதட்டல்; பந்தலுக்கு, தத்தம் அருமையான சேலைகளை பறிகொடுத்தவர்கள் தவிர்த்து, அனைவருமே தட்டினார்கள். டைக்கார இந்தியனுக்கு சந்தோஷம். ஃபாரின் போஸ்டிங் நிச்சயம்...

மேடம், மேடை ஏறப் போன போது, லாரிக்கார மாரியப்பன், பக்கத்தில் போய் பனங்கள்ளாய்க் குழைந்து கேட்டான்.

“எம்மா எம்மா... பொம்புளை பிள்ளை பெறுறதுக்கு மட்டும் ஆஸ்பத்திரி கட்டினால் எப்படிம்மா.. நாங்க ஆம்புளைங்க எங்கம்மா போவோம்? குழந்தை பெறுறதுக்கு மட்டுமா.... வயித்த வலி வருது? பிள்ளை உண்டானால்தான் வாந்தி வருமா? எங்களுக்கும் வரும்மா. நாங்க எங்கேம்மா போவோம்? எங்களுக்கும் ஒரு சின்ன ஆஸ்பத்திரியா... அம்மா அம்ம்மா"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/36&oldid=1404982" இலிருந்து மீள்விக்கப்பட்டது