பக்கம்:பாலைப்புறா.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 37

வாடாப்பூ, கூட்டத்தின் முகப்புக்கு வந்தாள். 'அந்த பேதிலபோவானை, யாராவது இழுத்துட்டுப் போங்க’ என்றாள். டை கட்டி இந்தியர், மாரியப்பனை மானசீகமாக உதைத்தார். ஃபாரீன் போஸ்டிங் கிடக்கட்டும். இப்போ, லோக்கல் நீடிப்பதே கஷ்டம்...

மேடம், மாரியப்பனை, அதிசயித்துப் பார்த்தாள். பிறகு அந்த டை கட்டியைக் கூப்பிட்டு, அவன் பேசியதை, ஆங்கிலத்தில் அர்த்தப்படுத்தச் சொன்னாள். அவரும் ஆங்கிலம் தெரிந்த கலைவாணியையும், ஆனந்தியையும் கணக்கில் கொண்டு, உள்ளபடியே மொழி பெயர்த்தார். மேடம் நிச்சிலோ 'ரியலி ரியலி.. குட் வெரிகுட்' என்றாள். பிறகு, தனது உதவியாளரிடம், மீண்டும் பேச அவர் மீண்டும் தமிழ்ப் படுத்தினார்.

‘இதோ இவர் சொன்னது மாதிரி கட்டப் போகிற பிரசவ ஆஸ்பத்திரிக்குப் பக்கத்திலேயே... ஒரு அனேக்ஷர் கட்டப்படும் என்று மேடம் சொல்லச் சொன்னாங்க. இதுல எல்லோருக்கும் எல்லா நோய்க்கும் எல்லா மருந்தும் கிடைக்கும் என்றும் சொல்லச் சொன்னாங்க. இதுக்கு முன்னோடியாய் அடுத்த வாரம் இலவச மருத்துவ முகாம் நடத்தும்படி கலெக்டர்கிட்ட வேண்டுகோள் விடுப்பாங்களாம். தமிழக அரசிடம், வெள்ளையன்பட்டியில், மருத்துவமனை கட்ட வேண்டும் என்று தான் கேட்டுக் கொண்டதையும் மேடம் ஞாபகப்படுத்தினாங்க”.

ஒரே கைதட்டல்; அதைப் பார்த்துவிட்டு, மேடமே கைதட்டினார். பிறகு மீண்டும் உதவியாளரிடம் ஒரு உரையாடல்; அவர் வாய் ஒலிப் பெருக்கியானது தமிழ் மொழிபெயர்ப்போடு.

"இதோ இவரை மாதிரி எல்லோரும் இருக்கணுமாம். இவரை மாதிரி ஒவ்வொருத்தரும் ஊர் தேவைகளை சொல்லி இருந்தால், இந்தியா, இதைவிட நல்லாவே முன்னேறி இருக்குமாம்”.

பயங்கரமான கைதட்டல், இப்போது மேடம் நிச்சிலே சுற்றி நின்றவர்களைப் பார்த்துப் பேசினாள்.

"வெள்ளையன்பட்டி. கீப் இட் அப் கீப் இட் அப்”

‘வெள்ளையன்பட்டியே இப்படியே இரு...இப்படியே இரு’

டைகட்டியவர், அப்படிக் கத்தினாலும், களைத்துப் போகவில்லை. சக்ஸஸ். ஃபாரின் போஸ்டில் வெற்றி... ஆனாலும், கலைவாணியிடம்

கிசுகிசுத்தார். ‘குட்டு உடையும் முன்னே, அவனை யாரையாவது விட்டு தூக்கிட்டுப் போகச் சொல்லுங்க.‘

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/37&oldid=1404983" இலிருந்து மீள்விக்கப்பட்டது