பக்கம்:பாலைப்புறா.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39

அந்த ‘டானா' வளைவு பள்ளிக்கூடம், அன்று மட்டும் இலவச மருத்துவ முகாமாகிவிட்டது. ஒரு நாள் கூத்துக்கு, மீசையை எடுத்தது போல், துணைக் கட்டிடத்தில் வகுப்புக்களை எல்லை பிரித்துக் காட்டும், பலகைத் தட்டிகள் அகற்றப்பட்டு, அந்த கட்டிட உள் வளாகம், பொதுக் கூடமானது. வரிசை வரிசையாய் பெஞ்சுகள் போடப்பட்டு, அதன் முன் பக்கம் வெள்ளைத் துணியால் போர்த்தப்பட்ட நீளவாக்கில் இரண்டு மேஜைகள். அந்த துணியை எவரும் எடுத்து, மேஜைகளின் அழுக்கை தெரியப்படுத்தக் கூடாது என்பது போல், இலைமறைவு காய்மறைவாய் பொருத்தப்பட்ட கிளிப்புகள். மேஜை மத்தியில் ஒரு மைக். அருகே ஒரு போடியம். அதன் முன்னால், இன்னொரு மைக்.

பள்ளி வளாகத்தில் ஆகாய காகித தோரணங்கள்; இடையிடையே, துணிப் பேனர்கள்... ‘வெள்ளையன் பட்டியாம் வீரபூமிக்கு... மகளிர் மருத்துவமனை கொண்டு வந்த சட்டமன்ற உறுப்பினர் அவர்களே! வருக! வருக!’ ‘மாவட்ட சுகாதார அதிகாரி அவர்களே வருக! வருக! ஏற்றமுள்ள மக்களுக்கு இரக்கமுள்ள அண்ணனே வருக! வருக!'

சட்டமன்ற உறுப்பினர் பற்றிய பேனரை, கலைவாணி, தாள முடியாத வெப்பமாகப் பார்த்தாள். இனிமேல் அதை எடுக்க முடியாது. அதைப் பார்த்துக் கொண்டே நின்றால், கோபம்தான் மிஞ்சும். கலைவாணி, கண்களைச் சுழலவிட்டாள். வெள்ளையன்பட்டி மக்கள், உறவின் அடிப்படையில் கும்பல் கும்பலாய் நின்றார்கள். சிறுவர் சிறுமியர், நடமாடும் மருத்துவ முகாம் வேனையும், அதற்குள் இருந்த விதவிதமான கருவிகளையும், லயித்துப் பார்த்தார்கள். இவர்களில் ஒரு சிலர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/39&oldid=1404985" இலிருந்து மீள்விக்கப்பட்டது