பக்கம்:பாலைப்புறா.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 41

சாலமன் பாப்பையா பிச்சு உதறுவார். இப்படிப்பட்ட இவர், ஏன், இன்று ஏருக்கு மாறாய் நிற்கிறார்? அன்றைக்கும் சரி இல்லை... இன்றைக்கும் சரி இல்லை. ஒரு துரும்பைத் தூக்கிப் போட்டு 'நீதான் மாப்பிள்ளை’ என்று சொல்லிவிட்டால் போதும். அது துள்ளுமாமே... அப்படி ஆகிட்டாரோ...

கலைவாணி, ஒரு தீர்மானத்துக்கு வந்துவிட்டாள். அவனையே நேருக்கு நேராய்க் கேட்டுவிடுவது... கல்யாணம் என்பது நூறாண்டு பயிர். இந்தப் பயிர் முளைக்கும் முன்பே வித்தை பார்க்க வேண்டும். அவள், தோழிகளிடம் இருந்து விடுபட்டு, அவன் நின்ற பக்கமாய் போனாள். ஒரு சுவரில் ஒட்டப்பட்ட, இலவச மருத்துவ முகாமை சின்னதாய்ப் போட்டு, இதைத் துவக்கி வைக்கப் போகும் எம்.எல்.ஏ. படத்தை பெரிதாகப் போட்ட போஸ்டரைப் படிப்பது போல் பாசாங்கு காட்டினாள். மனோகர், அந்த பட்டதாரிகளிடம் இருந்து விடுபடுவது வரைக்கும் நிற்கப் போவது போல் நின்றாள். ஆனால் இந்த மனோகரோ, அவளைப் பார்க்காமலே, சுற்றி வளைத்து பட்டதாரிகளுக்கு, இப்போது உபதேசித்துக் கொண்டு நின்றான்.

"எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்சிலே பதிவு செய்து, அப்படி பதிவு செய்தவர்களோட கார்டு அவனோட பட்டதாரி பிள்ளைக்கும் பொருந்துமுன்னு சட்டம் வந்தால் கூட, நமக்கு இன்னும் பிறக்காத பிள்ளைகளுக்கு கூட கார்டு வராது என்பதை ஒத்துக்கிறேன். ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட ஒருவனுக்கு வேலை கொடுக்கத்தான், ஒங்கள மாதிரி அப்பாவி இளைஞர்களோட பணத்தையும், காலத்தையும் பகல் கொள்ளை போடுறாங்க என்கிறதையும் ஒத்துக்கிறேன். ஆனால் இதுவே நாம் முயற்சி எடுக்காமல் இருக்கிறதுக்கு ஒரு சாக்காயிடப் படாது. பக்கத்து வாடாப்பட்டியில் பிறந்து, ஒரு தகர டப்பா காலேஜில் படித்த முத்துக்குமார், இப்போது ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில அசிஸ்டென்ட் புரபஸரா இருக்கார் என் கூடப் படித்த ஏழைப் பையன் ராமையா, பெர்லினில் சூப்பர் என்ஜினியராய் இருக்கான். தப்பா நினைக்காதீங்க. குறைந்த பட்சம் பத்திரிகை படிக்கும் பழக்கம் ஒங்களுக்கு உண்டா? சினிமா மலர்களை விட்டுட்டு, இந்து, இந்துஸ்தான் டைம்ஸ், எக்ஸ்பிரஸ் பத்திரிகைகளில் சப்ளிமெண்டை படிக்கிறது உண்டா... ஏன் ஊமையா நிற்கறீங்க...”

சுற்றி நிற்பவர்கள் சப்புக் கொட்டியபோது, பட்டைதாரியும், பட்டதாரியுமான சுப்பிரமணியன் சூடாய்க் கேட்டான்.

"அப்போ எவ்வளவு நாளைக்குத்தான் இழுத்தடிக்கப் போறீங்க?”

மனோகர், அவனை ஒன்றும் புரியாமல் பார்த்தான். பக்கத்தில் நின்ற பயல்களும், அவனைத்தட்டிக் கேட்கவில்லை. இது என்ன அதிகாரப்பிச்சை?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/41&oldid=1404987" இலிருந்து மீள்விக்கப்பட்டது