பக்கம்:பாலைப்புறா.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42 பாலைப்புறா

இவன்களிடம் பேசுவது காலவிரயம். சுயமரியாதைக்கு இழுக்கு.

மனோகர், அவர்களை விட்டு வேகமாய் நடந்தான். விறுவிறுப்பாய் நடந்தான். அந்த அவசரத்தில், கலைவாணி நிற்பதைக் கூட அவன் கவனிக்கவில்லை.

‘ஒன்மினிட்’

மனோகர் நின்றான். கலைவாணி, அவன், தன்னை உதாசீனம் செய்வதாக நினைத்து ரப்பாவே கேட்டான்.

"ஒங்க கிட்டே தனியாப் பேசணும். லெட்டஸ் பி ஃப்ராங்க்...”

‘'நான் இங்கே வந்ததே ஒங்க கிட்டே பேசத்தான். இன்னும் குடி முழுகிடல".

இருவரும் நடந்து, பள்ளிக்கூடத்திற்குப் பின்புறமாய் வந்தார்கள். அங்கே சுவருக்கும், ஒரு புளியமரத்திற்கும், இடையே நின்று கொண்டார்கள். யார் முதலில் பேசுவது என்ற தயக்கம் அல்லது கர்வம்... கலைவாணியே வெட்கம் விட்டுக் கேட்டுவிட்டாள்.

"எதுக்காக... என்னை அலட்சியப்படுத்தறீங்க? இன்னிக்கே நம்ம கல்யாணம் நடக்கணுமா, வேண்டாமான்னு தீர்மானம் எடுத்துடலாம். நான் மிரட்டுறதாய் நினைக்காதீங்க. என்னாலதாங்க முடியல".

"நானும் அதே முடிவுதான். மாப்பிள்ளை பிடிக்கல்லன்னு அழுகிறவளைகட்டிக்கிற அளவுக்கு நான் ரோஷம் கெட்டவன் இல்லே".

"யார் அழுதது?”

"நீங்க ஒரு நாள் முழுக்க அழுதீங்களாம். என் தங்கை- ஒங்க பிரண்ட் மீராவே சொன்னாள்!”

"கொஞ்சம் பேக்கிரவுண்டோடு சொல்ல முடியுமா?”

"சொல்றேன். மீரா... முகம் போன போக்கைப் பார்த்துட்டு டிவியைப் பார்த்தேன். மேல் நாடுகளில் மேடை போட்டு ஒரு ஆணையும் பெண்ணையும் பகிரங்கமாய் அந்தரங்க உறவுல ஈடுபடுத்தி, டிக்கட் வாங்குனவங்களுக்கு காட்டுறாங்களே லைஃப் செக்ஸ்... அந்த மாதிரியான ஒலியும், ஒளியும். உடனே நான் டி.வியை ஆப் செய்தேன். ஆன் செய்ய வந்தவளை கீழே தள்ளினேன். உடனே 'ஒன் புத்திக்குத்தான் மாப்பிள்ளை பிடிக்கல்லன்னு கலைவாணி ஒரு நாள் முழுக்க அழுதா'ன்னு சொன்னாள்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/42&oldid=1404988" இலிருந்து மீள்விக்கப்பட்டது