பக்கம்:பாலைப்புறா.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 43

நான்பிடிக்கல்லன்னா, நீங்க எனக்கே லட்டர் போட்டிருக்கலாம்”

"அடிப்பாவி... குடியைக் கெடுக்கப் பார்த்தாளே”

"அப்போ... நீ அழலியா?”

"அழுதது நிசம். ஆனால் கல்யாணம் வேண்டாமுன்னுதான் அழுதனே தவிர, மாப்பிள்ளை பிடிக்கல்லன்னு அழல்ல. ஏனோ இந்த ஊரைவிட்டும், எங்க வீட்டை விட்டும், இந்த அமைப்புகளை விட்டும் போக மனம் வரல. அப்புறம் அப்பாம்மா புத்தி சொன்னாங்க. நானும் யோசித்துப் பார்த்தேன். கல்யாணம் செய்யாமல் இருக்கப் போறதில்லை. எப்பவோ வரப் போற தேவனைவிட, எனக்கு தெரிந்த ராட்சதனே மேலுன்னு நினைத்தேன். அப்புறம் பாருங்க ஒங்க நெணைப்பு வந்து, இந்த ஊரு சின்னதாப் போயிட்டு, நீங்க பெரிசா ஆகிட்டீங்க...”

"மாப்பிள்ளை மனோகர்ன்னு சொன்னவுடனேயே உங்களுக்கு ஆசை வந்திருக்க வேண்டாமா...?”

"அந்த மாதிரி பிடிப்பாய் நீங்க பேசலியே! பேச்சுல்லாம் கம்ப்யூட்டர், இல்லாவிட்டால் விண்வெளி ஆராய்ச்சி".

"சரி... இப்போ மேல்நாட்டு லைஃப் செக்ஸ் பத்தி பேசட்டுமா?”

கலைவாணி, இதுவரை அவனைப் பாராத பார்வையாய்ப் பார்த்தாள். இயல்பாய்ப் பார்த்த அந்தக் கண்களை, இப்போது பார்க்கும் போதே ஒரு போதை. அவன் உதடுகளை நோக்கும் போதே, தனது உதடுகளில் ஈரக்கசிவு. அவன் நீட்டிய கையைப் பிடிக்கப் போனாள். அப்படிப் போன கையைப் பின் வாங்கினாள். அப்புறம் மெள்ள மெள்ள, பையப் பைய விரல்கள் விரல்களோடு, பின்னிப்பிணைந்து, ஒரு சின்னப் பாலமாய் ஆனது. வாய்கள், தன்பாட்டுக்கு பேசிக் கொண்டன. ஆண்டாண்டு காலமாய் ஊர் கருதியோ, கெளரவம் கருதியோ, கர்வத்தாலோ உள்ளடைக்கப்பட்ட உணர்வுகள்,... பீறிட்டுப் பின்னிக் கொண்டன.

"இப்போதான், என்மனசே. மனசா இருக்குது".

"எனக்கும்தான்".

"இந்த ஊரை விட்டு நீ பிரியனும் என்கிறது தற்காலிகந்தான். இன்னும் மூன்று மாதத்தில எங்க கம்பனி பிராஞ்ச் திருநெல்வேலியில் ஒப்பன் ஆகப் போகுது. அநேகமாய் என்னைத்தான் பிராஞ்ச் மானேஜராய் போடுவாங்க. வேனுமானால் இந்த மூன்று மாதமும் நீ இங்கேயே இருக்கலாம். அதுவரைக்கும் பல்லைக்கடிச்சிட்டு பொறுத்துக்கிறேன்".

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/43&oldid=1404989" இலிருந்து மீள்விக்கப்பட்டது