பக்கம்:பாலைப்புறா.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44 பாலைப்புறா

"ஆனால்... நான் பொறுக்கமாட்டேன். நீங்கதான் என்னோட நேரு இளைஞர் மையம். நீங்கதான் என்னோட அறிவொளி இயக்கம். நீங்கதான் என்னோட பிரசவ ஆஸ்பத்திரி".

"ஏய்..."

கலைவாணி, புளியமரத்தில் சாய்ந்து நின்றவன் மேல், அப்படியே சாய்ந்தாள். இதற்குள் அந்தப் பக்கம் சத்தம். வேலை இல்லா பட்டதாரிகள்.

"அந்த சுப்பிரமணியன் இருக்கான் பாரு, என்கிட்ட அவன் பேசுற விதமே சரியில்ல".

கலைவாணி, தான் கேள்விப்பட்டதைச் சொல்லப் போனாள். அந்த சுப்பிரமணியத்தின் அப்பாவிடம், இந்த மனோகரின் அப்பாவான தவசிமுத்து மாமா, மகன் மூலம் வேலை வாங்கித் தருவதாய் வாக்களித்து, ஐயாயிரம் ரூபாய் முன் பணமாய் வாங்கியிருப்பதாக ஊரில் அடிபடும் செய்தியை கூறப்போனாள். வேண்டாம். இந்த மூடை கெடுக்கப்படாது. மாமனாரைப் பற்றி கோள்மூட்டுவதாக வரப்படாது. சமயம் வரும் பேசிக்கலாம்:

கலைவாணியும், மனோகரும் கைகோர்க்காத குறையாக நடந்தார்கள். அவளுக்கு, அந்தப் பழையவன், புதியவன் போல் தோன்றினான். கனிவான கண்டிப்போடு பேசும் அவன், பெரிய மனிதத் தனமும், குழந்தைத்தனம் ஊடகமாய் குழைந்தும், இழைந்தும் இப்படி இதமாகப் பேசுவது இதுவே முதல் தடவை; முதல் அனுபவம்; ஏறிட்டுப் பார்த்தால் கண்களை எடுக்க முடியாத, அதே சமயம் இன்னதென்று விளக்க முடியாத ஏதோ ஒரு வசீகரம். திடீரென்று குலவைச் சத்தம்; திரும்பிப் பார்த்தால், கனகம்மா, பாம்படக் காதுகள் ஆட ஆட, வாய்க்குள் நாக்கை சுழற்றுகிறாள். பிறகு ‘இப்போது மாதிரியே எப்பவும் இருக்கக் கடவது' என்கிறாள். கூட நிற்கும் பெண்களில், ஆனந்தி தவிர்த்து, அத்தனை பெண்களும் கைதட்டுகிறார்கள்.

கலைவாணியும், மனோகரும், நாணிப் போய் நிற்கிறார்கள். நிமிர்ந்து பார்த்தால், மாவட்ட சுகாதார அதிகாரிக் கிழவர் டாக்டர் சுகுமார், கையாட்டி கூப்பிடுகிறார். போனால், கலைவாணியைப் பார்த்து, ‘கன்கிராஜுலேஷன் கலைவாணி. அந்த அடிக்கல் நாட்டு விழாவில் வெளுத்து வாங்கிட்டிங்க’ என்கிறார். அவளைக் கனிவோடு பார்க்கிறார். கோணச்சத்திர ஆரமப சுகாதார நிலைய டாக்டர் சந்திரா, கலைவாணியின் கரம் பிடித்துக் குலுக்குகிறாள். அந்த நிலையத்தின் இன்சார்ஜ் டாக்டர் முஸ்தபா மட்டும் ஆகாயத்தைப் பார்க்கிறார்.

கலைவாணி, மனோகரை வெட்கத்தோடு அறிமுகம் செய்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/44&oldid=1404990" இலிருந்து மீள்விக்கப்பட்டது