பக்கம்:பாலைப்புறா.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49

டாக்டர் சந்திராவுக்கு, காத்திருப்பதோ அல்லது காக்க வைப்பதோ, அறவே பிடிக்காது. இதனால்தான், அவள் சினிமாவுக்குக் கூட போவதில்லை. ஆனாலும் மனோகருக்காக அவள் காத்திருந்தாள். நல்ல வேளையாய், இந்தக் கோணச்சத்திர, அச்சகக் கூடத்திற்கு அருகேயே, அவனைப் பாத்துவிட்டாள். திருமண அழைப்பிதழை, புரூப் பார்க்க வந்தானாம்... எவனை, ஆளனுப்பி, வெள்ளையன்பட்டியில் இருந்து கூப்பிட நினைத்தாளோ, அவன், தானாய் கிடைத்ததில், அந்த அதிருப்தியிலும் ஒரு திருப்தி.

சந்திராவின் கண்முன்னாலயே, மனோகரும் கலை வாணியும் ஒன்றாய் சோடி சேர்ந்து இன்னமும் நிற்கிறார்கள். ராமபிரான் சீதாப்பிராட்டி சோடி மாதிரி; போன வாரம் அந்த மருத்துவ முகாம் முடிந்ததும், கலைவாணி, தன்னையும், சக டாக்டர்களையும், வலுக்கட்டாயமாக வீட்டிற்குக் கூட்டிப் போய் உபசரித்த விதத்தை, மறக்க முடியவில்லை... ஒரே குடும்பத்தில் எல்லோருமே நல்லவர்களாக இருக்க முடியுமா... இந்த மனோகர் மட்டும் என்ன. கலைவாணி வீட்டில், பசுமாடு சத்தியாக்கிரகம் செய்ததால், இவன் தன் வீட்டிற்கோ அல்லது எங்கேயோ போய், ஒரு செம்பு நிறைய பால் கொண்டு வந்தவன்; அந்தத் தெருவிலேயே, அந்த பாடிபில்டர் மைத்துனரிடம் பாற்செம்பை நீட்டியவன்... அந்தத் தெருவிலேயே, தங்களுக்காகக் காத்திருந்து, வழியனுப்பியவன்; கல்யாண மாப்பிள்ளை, நிச்சய தாம்பூலத்திற்கும், திருமணத்திற்கும் இடையே, பெண் வீட்டுக்குள் நுழையக் கூடாது என்ற பத்தாம்பசலி உருப்படாத வழக்கத்தை, இந்த மனோகருக்காவது விட்டுக் கொடுத்திருக்கலாம். ஒருவேளை அப்படி தெருவில் நின்றதே ஒரு அபசகுனம் மாதிரியோ...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/49&oldid=1405005" இலிருந்து மீள்விக்கப்பட்டது