பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

150

ஆரியர் விழுது!

நாடென்பார்; மொழியென்பார்; தமிழர்க் கெல்லாம் நலிவென்பார்; இழிவென்பார்; பிறநாட் டாரால் கேடென்பார்; மக்களெலாம் திரள்க வென்பார்; கிளர்ந்தெழுமோர் வல்லுணர்வை எழுதிக் காட்டும் ஏடென்பார்; எழுத்தென்பார்; இலக்கி யத்தின் ஏற்றமெலாம் பலவாறாய் எடுத்துக் காட்டிப் பாடென்பார்; ஆனாலும் தமிழர்க் குற்ற பழிபோக்க வழிகாட்டார்! பதுங்கு வாரே!

மூச்சென்பார்: தமிழ்மொழியை ஆள வந்தார்

முதுகெலும்பை முறித்திடுமோர் உயர்ந்த மேடைப் பேச்சென்பார்! உரைநடையும் பாட்டுஞ் சேர்ந்த பேருயர்ந்த நாடகத்தை நடித்து விட்டால், ஆச்சென்பார்! ஆயிரம்பேர் பட்டம் பெற்ற - அணியென்பார்; முன்னேற்ற நடைகாட் டுங்கை வீச்சென்பார்! ஆனாலும் ஆரியத்தை . . . வீழ்த்துதற்கு வழிகாட்டார்! வீழ்கின் றாரே!

'எழும்பரிதிக் கதிரேயாம் என்பார்; போர்த்த இருள்நீக்க எழுந்ததிந்தக் கூட்டம் என்பார்! தழும்பெல்லாம் போராட்டத் தழும்பே என்பார், தனித்துயர்ந்த திரவிடக்கூட் டாட்சி என்றே பழம்புகழ்ச்சி பேசிடுவார்; ஆனால் நாட்டுப் பாழ்நிலைதீர் வழிகாட்டார்; காட்டு வோர்க்கும் விழும்பகைமை காட்டுகின்றார்; ஆரி யர்க்கே விழுதாக நிற்கின்றார்! வீட னோரே!

- 1976