பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137.

205

வருங்காலம் தமிழர்க்கே!

நெடுங்காலம் முன்பே, நம் தமிழர்க்கு விழுந்துவிட்ட இனக்கூனை நிமிர்ப்ப தென்றால், கடுங்கால வினைமுயற்சி, தேவையென மொழி, இன, நாட் டுரிமையினர் உணர்தல் வேண்டும்! கெடுங்காலம் இனும் நமக்குப் - போகவில்லை; உட்பகையும் மறைய வில்லை! எனினும் நன்மை அடுங்காலம் தொலைவிலில்லை; அன்றன்றும் அடுத்தடுத்தும் முயன்றிடுக! முயற்சி வெல்லும் !

பகைவர்க்கு வலிவில்லை; நம்மைவிட அறிவில்லை; பரவிவிட்ட நோய்நம் நோயே! தகைவர்க்குக் குறைவில்லை; தருமுழைப்பும் கேடில்லை; தாழ்வெல்லாம் நாம்செய் தாழ்வே! தொகை நிறைந்த தொண்டர்க்கும் தொய்வில்லை; துணிவிற்கும் தாழ்வில்லை; தொன்மை எண்ணி வகைசெய்து திட்டமிட்டுப் போரிட்டால் வருங்காலம் தமிழர்க்கு வாழ்கா லம்மே!

- 1987