பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

திருக்குறள்

தமிழ் மரபுரை


இருத்தல். பிள்ளைகளைப் பெற்றவர்க்கே பிறரிடத்து அன்புண்டாகும் என்பது பொதுவான உலகக் கொள்கை,

71. அன்பிற்கு முண்டோ வடைக்குந்தா ழார்வலர்
புன்கணீர் பூச றரும்.

(இ-ரை.) அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் - ஒருவரது அன்பிற்கும் அதைப் பிறர் அறியாதவாறு அடைத்துவைக்கும் தாழ்ப்பாள் உளதோ? ஆர்வலர் புன்கண் நீர் பூசல் தரும் - தம்மால் அன்புசெய்யப்பட்டாரது துன்பங் கண்டவிடத்து அன்புடையாரின் துன்புறுங் கண் சிந்தும் நீரே அவருள்ளத்திலுள்ள அன்பை எல்லாரும் அறியப் பறைசாற்றிவிடும்.

உம்மை சிறப்புப் பற்றியது. புன்கண் புன்கூர்ந்த கண். புன்மை துன்பம். ஆர்வலர் துன்பம் அவர் கண்ணின்மேல் ஏற்றப்பட்டது.

இனி, துன்பக்கண்ணீரன்றி நீண்ட காலத்திற்குப்பின் கண்ணன்ன கேளிரைக் காணும்போது சிந்தும் காதற்கண்ணீரும் உண்டென அறிக.

72. அன்பிலா ரெல்லாந் தமக்குரிய ரன்புடையா
ரென்பு முரியர் பிறர்க்கு.

(இ-ரை.) அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர் - அன்பில்லாதவர் எல்லாப் பொருள்களையுந் தமக்கே பயன்படுத்துவர்; அன்பு உடையார் என்பும் பிறர்க்கு உரியர் - அன்புடையாரோ பிறிதின் கிழமைப் பொருள்களை மட்டுமன்றித் தற்கிழமைப் பொருளாகிய தம் உடம்பையும் பிறர்க்குப் பயன்படுத்துவர்.

பிரிநிலை யேகாரமும், 'உரியர்' என்னும் வினைக்கேற்ற எல்லாவற்றாலும்', 'என்பாலும்' என்னும் கருவிவேற்றுமை யுருபுகளும் தொக்கன. எலும்பு என்பதன் மரூஉவான 'என்பு' சினையாகு பெயர். உம்மை சிறப்பும்மை. உடம்பைப் பிறர்க்கு உதவிய அன்பிற்கு, தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறாவிற்காகத் தன் தசையையும் உடம்பையும் அளித்த செம்பி (சிபி) என்னும் சோழ வேந்தன் கதை எடுத்துக்காட்டாகக் கூறப்பெறும். ஆயின், அதனினும் சிறந்த எடுத்துக்காட்டு, தன் தம்பியால் தன் நாடு கொள்ளப்பட்டுக் காட்டிற்போய்த் தங்கியிருந்த குமணன், தன்னைப் பாடிய பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர்க்குத் தன் தலையை வெட்டிக் கொண்டு போய்த் தன் தம்பியிடங் காட்டிப் பெரும் பொருள் பெறுமாறு தன் வாளைக் கொடுத்ததாகும். இதை,