பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

திருக்குறள்

தமிழ் மரபுரை


அடையும் சிறந்த இன்பத்தை; அன்பு உற்று அமர்ந்த வழக்கு என்ப-அவர் முன்பு இங்கு அன்போடு பொருந்த வாழ்ந்த நெறியின் பயன் என்று சொல்வர் அறிந்தோர்.

'வழக்கு'என்பது ஆகுபொருளது.இல்லறத்தினாலேயே இம்மையில் இவ்வுலக இன்பமும் மறுமையில் விண்ணுலக வின்பமும் பெறுவதற்குக் கரணியமாயிருப்பது அன்பு ஒன்றே என்பது இங்குக் கூறப்பட்டது.

76. அறத்திற்கே யன்புசார் பென்ப வறியார்
மறத்திற்கு மஃதே துணை.

(இ-ரை.) அன்பு அறத்திற்கே சார்பு என்ப - அன்பு அறத்திற்கே துணையாவது என்று சிலர் சொல்வர்; அறியார் - அவர் அறியார்: மறத்திற்கும் அஃதே துணை - அதன் மறுதலையான மறத்திற்கும் அவ் வன்பே துணை யாவது.

அறம் மறம் என்பன இங்கு நல்வினை தீவினை என்று பொருள்படும் எதிர்ச்சொற்கள். அன்பு மறத்திற்குத் துணை என்பது, இஞ்சி பித்தத்திற்கு நல்லது என்பது போல்வது.

"மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்" (168)

"இன்னாசெய் தாரை யொறுத்த லவர்நாண
நன்னயஞ் செய்து விடல்" (314)

என்னுங் குறள்கள் இங்குக் கவனிக்கத் தக்கன. ஒரு பகைவனுக்கு நன்மை செய்தவிடத்து அவன் நாணித் தன் பகைமையை விட்டு நட்பாவது இயல்பாதலின், "மறத்திற்கு மஃதே துணை" என்றார்.

ஒருவன் தன் மனைவி மக்கள் மேலுள்ள அன்பினால், அவரைக்காத்தற்குத் தீயவழிகளிலும் பொருள் தேடுதல் உலகத்து நிகழ்தலால், அதனையே "மறத்திற்கு மஃதே துணை" என்று குறித்தார் என்று உரை கூறுவாருமுளர். அகப்பற்றால் தீமை செய்வது போன்றதே புறப்பற்றால் தீமை செய்வது மாதலானும், தீமைக்குத் துணைசெய்வது அறத்தொடு பொருந்தாமையானும், அது உரையன்மை அறிக.

77. என்பி லதனை வெயில்போலக் காயுமே
யன்பி லதனை யறம்.