பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - இல்லறவியல் - அன்புடைமை

83


(இ-ரை.) அறம் - அறத் தெய்வம்: அன்பு இலதனை -அன்பில்லாத உயிரை, என்பு இலதனை வெயில் போலக் காயும் - எலும்பில்லாத வுடம்பை வெயில் எரித்தாற் போல் எரிக்கும்.

எலும்பில்லாத வுடம்பு பூச்சி புழுக்களுடையன. அன்பில்லாத வுயிர் என்றது மக்களுயிரை. வெயில் வந்தபோது எலும்பில்லா வுடம்பு துன்புறுவதுபோல. வினைப்பயன் வந்தபோது அன்பு செய்யா மக்களுயிர் துன்புறும் என்பது. அன்பு செய்யாமையாவது அதற்கு மறுதலையான தீமை செய்தல். "அரைசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற் றாவதூஉம்" என்றார் இளங்

கோவடிகள் (சிலப். பதிகம்)."அல்லவை செய்தார்க் கறங்கூற்றம்" என்றார் விளம்பிநாகனார் (நான்மணி. 85). மக்களை உயிர் என்றது அன்பின்மையாகிய இழிவுபற்றி.

78. அன்பகத் தில்லா வுயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றன் மரந்தளிர்த் தற்று.

(இ-ரை.) அகத்து அன்பு இல்லா உயிர்வாழ்க்கை - உள்ளத்தில் அன்பில்லாத வுயிர் இல்லற வாழ்க்கை நடாத்துதல்; வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்த அற்று - பாலைநிலத்தின்கண் பட்டுப்போன மரம் தளிர்த்தாற் போலும்.

நடவாத தென்பதாம். 'வற்றல்' தொழிலாகு பெயர். 'வற்றன்மரம்' இருபெயரொட்டு. அன்னது - அற்று. அன்பில்லா மக்களை உயிர் என்றது இழிவுக் குறிப்பு.

79. புறத்துறுப் பெல்லா மெவன்செய்யும் யாக்கை
யகத்துறுப் பன்பி லவர்க்கு.

(இ-ரை.) யாக்கை அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு - இல்லறம் நடத்துவாரின் உடம்புள் நின்று இல்லறத்திற்கு உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு; புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் - மற்றப் புறத்து நின்று உறுப்பாவன வெல்லாம் அவ்வறஞ் செய்தற்கண் என்ன உதவியைச் செய்யும்?

புறத்துறுப்பாவன இடம்பொரு ளேவல் முதலியன. இது பரிமேலழக ருரையைத் தழுவியது. இனி, மணக்குடவர் பரிதி காளிங்கர் உரைக் கருத்து வருமாறு: