பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

திருக்குறள்

தமிழ் மரபுரை


உடம்பிற்கு அகத்துறுப்பாகிய அன்பில்லாதவர்க்குப் புறத்துறுப்பாகிய மெய் வாய் கண் மூக்குச் செவியும், மார்பும் தோளும் முகமும் மயிர்முடியும் பிறவும், மரப்பாவைபோல் அழகாயிருந்தும் என்ன பயன்?

இதுவுங் கொள்ளத் தக்கதே. அகத்துறுப்பாகிய அன்பில்லாதவர்க்குப் புறத்துறுப்பாகிய ஐம்பொறிகளும் கை கால் முதலிய வினையுறுப்புகளும் நிறைவாயிருந்தும், அவற்றால் இல்லற நடப்பிற்கு என்ன பயன் என்று வினவற் கிடமிருத்தலால், “அதற்கு இல்லறத்தோடு யாது மியையில்லாமை யறிக" என்று பரிமேலழகர் மறுத்துரைப்பது பொருந்தாது. அன்பில்லாத வுடம்பு என்புதோற் போர்ப்பென்று ஆசிரியரும் அடுத்த குறளிற் கூறுதல் காண்க.

80. அன்பின் வழிய துயிர்நிலை யஃதிலார்க்
கென்புதோல் போர்த்த வுடம்பு.

(இ-ரை.) அன்பின் வழியது உயிர்நிலை - அன்பின் வழிப்பட்ட உடம்பே உயிர்நிலை என்று சிறப்பித்துச் சொல்லப் பெறுவது; அஃது இலார்க்கு உடம்பு என்பு தோல் போர்த்த - அவ் வன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்புகள் உயிரில்லாது எலும்பைத் தோலாற் போர்த்த போர்ப்புகளே.

அன்பின் வழியது என்பது அன்பு செய்தற் கென்றே ஏற்பட்டது. இதன் விளக்கமே,

"அன்போ டியைந்த வழக்கென்ப வாருயிர்க்
கென்போ டியைந்த தொடர்பு " (73)

என்னுங் குறள். உயிர்நிலை என்பது கதவுநிலை என்பது போன்ற கூட்டுச் சொல். என்புதோற் போர்ப்பு என்றது பிணத்தினும் இழிந்த தென்னுங் குறிப்பினது.

அதி.9-விருந்தோம்பல்

அதாவது, இல்லறம் நடத்தும் கணவனும் மனைவியும், அன்புடைய ராயிருந்து, தம் இல்லத்திற்கேனும் ஊருக்கேனும் புதிதாக வந்த உயர்ந் தோரையும் ஒத்தோரையும், அவர் தங்கும் சில பல நாள்கட்கு அவர் தகுதிக்கும் தம் நிலைமைக்கும் ஏற்ப, உறையுளும் சிறந்த வூணும் உதவிப் பேணுதல்.