உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

திருக்குறள்

தமிழ் மரபுரை


சேர்த்து, ஐவகை வேள்வி யென்று தொகுத்துக் கூறி, வேள்வியென்று வருமிடமெல்லாம் ஆரிய வேள்வியை நினைக்குமாறு செய்துவிட்டனர்.

89. உடைமையு ளின்மை விருந்தோம்ப லோம்பா
மடமை மடவார்க ணுண்டு.


(இ-ரை.) உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை - செல்வக் காலத்து வறுமையாவது விருந்தோம்பலைப் புறக்கணிக்கும் பேதைமை; மடவார்கண் உண்டு - அது பேதையரிடத்திலேயே உள்ளது.

செல்வத்தின் பயனை இழப்பித்து அதை வறுமையாக மாற்றுவதால், பேதைமையை வறுமையாகச் சார்த்திக் கூறினார்.

90.மோப்பக் குழையு மனிச்ச முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

(இ-ரை.) அனிச்சம் மோப்பக் குழையும் - இயல்பாக மென்மையாகவுள்ள பூக்களுள்ளும் மிக மென்மையானதாகச் சொல்லப்படும் அனிச்சப் பூவும் மோந்தால் மட்டும் வாடும்; விருந்து முகம் திரிந்து நோக்கக் குழையும் - ஆனால், தன்மானமுள்ள விருந்தினரோ, வீட்டாரின் முகம் வேறுபட்டு நோக்கிய மட்டில் வாடிவிடுவர்.

'அனிச்சம்' முதலாகுபெயர். தொட்டு முகர்ந்தால் வாடும் அனிச்ச மலரினும் தொலைவில் முகம் வேறுபட்டு நோக்கியமட்டில் வாடும் விருந்தினர் மென்மையராதலின், விருந்தோம்புவார் இன்சொற்கும் இன்செயற்கும் முன் இன்முகங் காட்டவேண்டுமென்பது இங்குக் கூறப்பட்டது.

அதி.10 - இனியவை கூறல்

அதாவது, பொதுவாக எல்லார்க்கும், சிறப்பாக விருந்தினர்க்கும், இன்முகங் காட்டியபின் இன்சொற் சொல்லுதல்.

91.இன்சொலா லீர மளைஇப் படிறிலவாஞ்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

(இ-ரை.) இன்சொல் - இனிய சொல்லாவன: ஈரம் அளைஇ - அன்பு கலந்து; படிறு இலவாம்- வஞ்சனை யில்லாத; செம்பொருள் கண்டார் வாய்ச்சொல் - மெய்ப்பொருளை யறிந்த சான்றோர் வாய்ச்சொற்கள்.