பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - இல்லறவியல் - இனியவை கூறல்

91


'ஆல்' அசைநிலை. படிறு - பொய். எப்பாலவரும் இயையும் உண்மைப் பொருள் என்றும் மாறாது நேராயிருத்தலின் 'செம்பொருள்' என்றார். 'செம்பொருள் கண்டார் வாய்ச்சொல்' என்றது, அவர் வாயினின்று வருஞ்சொற்களெல்லாம் என்றும் இனியனவே என்பதை உணர்த்தற்கு. 'அளைஇ' சொல்லிசை யளபெடை


92.

அகனமர்ந் தீதலி னன்றே முகனமர்ந்
தின்சொல னாகப் பெறின்.

(இ-ரை.) முகன் அமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின் - ஒருவரைக் கண்டபொழுதே முகமலர்ந்து இனிய சொல்லும் உடையனாகப் பெறின்; அகன் அமர்ந்து ஈதலின் நன்று - அது மனமுவந்து ஒரு பொருளைக் கொடுத்தலினும் சிறந்ததாம்.

வெறுநோக்கினும் வெறுஞ் சொல்லினும் ஒரு பொருளைக் கொடுத்தலே உண்மையிற் சிறந்ததாயினும், மக்கள் பொதுவாக வெளிக்கோலத்திற்கே வயப்படுவதால், அகமலர்ச்சி வெளிப்படாத கொடையிலும் முகமலர்ச்சியோடு கூடிய இன்சொல்லே நல்லதென்றார்.

93.

முகத்தா னமர்ந்தினிது நோக்கி யகத்தானா
மின்சொ லினதே யறம்.

(இ-ரை.) முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி - ஒருவரைக் கண்ட பொழுதே முகமலர்ச்சியோடு விரும்பி இனிதாக நோக்கி; அகத்தான் ஆம் இன்சொலினதே அறம் - பின்பு நெருங்கியவிடத்து அகமலர்ச்சியோடு கூடிய இனிய சொற்களைச் சொல்லுதலையுடையதே அறமாவது.

ஒருவரைக் கண்டபொழுதே ஒரு பொருளை யீதல் பொதுவாக இயையாமையின், முதற்கண் இன்முகங் காட்டலும் உடனும் அடுத்தும் இன்சொற் சொல்லுதலும் மக்களைப் பிணித்து மகிழ்விக்குந் தன்மையனவாதலின், விருந்தினரிடத்தும் அம் முறையைக் கையாள்வதே சிறந்த தென்றார்.


94.

துன்புறூஉந் துவ்வாமை யில்லாகும் யார்மாட்டு
மின்புறூஉ மின்சொ லவர்க்கு.

(இ-ரை.) யார்மாட்டும் இன்புறும் இன்சொலவர்க்கு - யாரிடத்தும் இன்புறுத்தும் இன்சொல்லைச் சொல்வார்க்கு: துன்புறும் துவ்வாமை இல்லாகும் -துன்புறுத்தும் வறுமை இலதாகும்.

8