பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

திருக்குறள்

தமிழ் மரபுரை


'உறூஉம்' ஈரிடத்தும் பிறவினையான இன்னிசை யளபெடை. துவ்வாமை நுகராமை. துய்-து. எல்லாரிடத்தும் இன்சொற் சொல்வார்க்கு எல்லாரும் நண்பரும் அன்பரு மாவராதலின், எல்லாப் பொருளுங் கிடைக்கு மென்றும் அதனால் வறுமை யிராதென்றும் கூறினார். வறுமையால் ஐம்புல நுகர்ச்சி கூடாமையின் வறுமையைத் துவ்வாமையென்றார். வறியவரைத் 'துவ்வாதவர்' என்று முன்னரே (42) கூறியிருத்தல் காண்க.

95.

பணிவுடைய னின்சொல னாத லொருவற்
கணியல்ல மற்றுப் பிற.

(இ-ரை.) ஒருவற்கு அணி பணிவு உடையவன் இன்சொலன் ஆதல் ஒருவனுக்கு அணியாவன அடக்கமுடைமையும் இன்சொலுடைமையுமாம்; பிற அல்ல - மற்றப் பொன்னாலும் மணியாலும் செய்யப்பட்ட அணிகள் அணிகளாகா.

பணிவுடைமை இன்முகத்தோடு கூடியதாதலின் இன்சொற்கு உடன் சேர்த்துக் கூறப்படும் இனமாயிற்று. பண்டைக்காலத்தில் ஆடவரும் காதிலும் கழுத்திலும் கையிலும் அணியணிவது பெரு வழக்கமாதலின், 'ஒருவற்கு என ஆண்பாலாற் குறித்தது தலைமைபற்றியதாகும். அடக்கமுடைமையும் இன்சொலுடைமையும் இருபாற்கும் ஒப்பப் பொதுவேனும், அணியுடைமை பெண்பாற்குப்போல் ஆண்பாற்குத் தேவையன்று என்பது குறிப்பான் அறியப்படும். 'மற்று' அசைநிலை.

96.

அல்லவை தேய வறம்பெருகு நல்லவை
நாடி யினிய சொலின்.

(இ-ரை.) நல்லவை நாடி இனிய சொலின் - விளைவாற் பிறர்க்கு நன்மை பயக்குஞ் சொற்களை ஆராய்ந்தறிந்து அவற்றைச் செவிக்கினிதாக ஒருவன் சொல்வானாயின் அல்லவை தேய அறம் பெருகும் - அவனுக்குத் தீவினைப் பயன் குன்ற நல்வினைப் பயன் வளரும்.

அறம் நல்வினை; இங்கு அதன் பயனைக் குறித்தது. அறமல்லாதவை தீவினைகள். தீவினைகள் தேய்தலாவது தீவினைப் பயன் குன்றல். நல்வினையும் தீவினையும் ஒளியும் இருளும் போல மறுதலைப் பொருள்களாதலின், ஒளியின் முன் இருள் கெடுதல் போல நல்வினைப் பயன் முன் தீவினைப் பயன் கெடுமென்றார். நல்லவற்றைச் சொன்னாலும் அறமாகு மேனும், அவற்றைக் கடுமையாகச் சொல்லின் கேட்பார் மனம் வருந்தி அவ் வறங்-