பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - இல்லறவியல் - இனியவை கூறல்

93


கெடுதலால், நல்லவற்றையும் இனிதாகச் சொன்னாலன்றி அறமாகா தென்றார். இதனால் இன்சொல்லின் அறத்தன்மை வலியுறுத்தப் பெற்றது.

97.

நயனீன்று நன்மை பயக்கும் பயனீன்று
பண்பிற் றலைப்பிரியாச் சொல்.

(இ-ரை.) பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல் - விளைவாற் பிறர்க்கு நன்மை செய்து இனிமைப் பண்பினின்றும் நீங்காத சொல்; நயன் ஈன்று நன்றி பயக்கும் - இம்மைக்கு நேர்பாட்டை (நீதியை) உண்டாக்கிமறுமைக்கு அறத்தையும் விளைவிக்கும்.

நேர்பாடு என்பது நீதி என்னும் வடசொற்கு நேர்த் தென்சொல். நேர்மை என்பது நேர்பாட்டையுங் குறிக்கும் பலபொரு ளொருசொல். நேர்பாடு நேர்மையான ஒழுக்கம். "கோணே நேர்பாடா யிருந்தான்" (பாரத. சூது. 227), பண்பு என்பது இங்கு அதிகாரத்தால் இனிமைப் பண்பைக் குறித்தது. தலைப்பிரிதல் என்பது தலைக்கூடுதல் என்பதற்கு எதிர்.

98.

சிறுமையு ணீங்கிய வின்சொன் மறுமையு
மிம்மையு மின்பந் தரும்.

(இ-ரை.) சிறுமையுள் நீங்கிய இன்சொல் - விளைவாலும் பொருளாலும் குரலாலும் பிறர்க்கு நோய் செய்யாத இனிய சொல்; இம்மையும் மறுமையும் இன்பம் தரும் - ஒருவனுக்கு இருமையிலும் இன்பம் விளைவிக்கும்.

இம்மை இன்பமாவது ஐம்புல நுகர்ச்சி பெற்று நோயற்ற நீடு வாழ்வு. மறுமை யின்பமாவது விண்ணுலக வாழ்வு அல்லது மண்ணுலக நற்பதவி. இன்சொல் என்பது இன்செயலையுந் தழுவும்.

99.

இன்சொ லினிதீன்றல் காண்பா னெவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.

(இ-ரை.) இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் - பிறர் கூறும் இன்சொல் தனக்கு இன்பந் தருதலை நுகர்ந்தறிகின்றவன்; வன்சொல் வழங்குவது எவனோ - தான் மட்டும் பிறரிடத்தில் வன்சொல்லை ஆள்வது என்ன பயன் கருதியோ?

'கொல்' அசைநிலை. 'ஓ' இரக்கப் பொருளது. "தன்னுயிர்போல் மன்னுயிரை நினைக்க வேண்டும்" என்பது இங்கு வற்புறுத்தப்பட்டது.