பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

திருக்குறள்

தமிழ் மரபுரை


100. இனிய வுளவாக வின்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

(இ-ரை.) இனிய உளவாக இன்னாத கூறல் - தனக்கு அறமும் பிறர்க்கு இன்பமும் பயக்கும் இனிய சொற்களும் எளிதாய் வழங்குமாறு தன்னிடத் திலிருக்கவும், அவற்றை வழங்காது தனக்குத் தீதும் (பாவமும்) பிறர்க்குத் துன்பமும் பயக்கும் கடுஞ்சொற்களை ஒருவன் வழங்குதல்; கனி இருப்பக் காய் கவர்ந்த அற்று - இனியனவும் வாழ்நாளை நீட்டிப்பனவுமான கனிகளும், கைப்பனவும் சாவைத் தருவனவுமான காய்களும் ஒருசரியாய்க் கைக்கு எட்டுவனவாக விருக்கவும், அவற்றுள் முன்னவற்றை விட்டுவிட்டுப் பின்னவற்றை மட்டும் பறித்துண்ட லொக்கும்.

பொருளைச் சிறப்பிக்கும் அடைமொழிகள் உவமத்திற்கும் ஏற்குமாதலால், இனிய கனி என்பது ஒளவையாருண்ட அருநெல்லிக்கனி போலும் வாழ்வு நீட்டியையும், இன்னாத காய் என்பது எட்டிக்காய் போலும் உடன் கொல்லியையும் குறிக்கும் என அறிக. 'கவர்ந்தற்று' என்னும் சொல் மரங்களினின்று காய்கனிகளைப் பறிக்குஞ் செயலை நினைவுறுத்தும். கவர்தல் பறித்தல்; இங்குப் பறித்துண்டல். பிறரிடத்து இன்னாச்சொற் சொல்லுதல் தனக்கே தீங்கை வருவிக்கும் பேதைமை யென்பது இதனாற் கூறப்பட்டது.

உவமமும் பொருளும் சேர்ந்தது உவமை என அறிக.

அதி. 11- செய்ந்நன்றி யறிதல்

அதாவது, இன்முகத்தோடும் இன்சொல்லோடும் விருந்தோம்பி வேளாண்மை செய்தவர்க்கும் வேறு வகையில் உதவினவர்க்கும் நன்றி யறிவுடையரா யிருத்தல். “உப்பிட்டவரை உள்ளளவும் நினை”. “உண்ட. வீட்டிற்கு இரண்டகம் பண்ணுகிறதா?” என்னும் பழமொழிகள் இங்கு நினைக்கத் தக்கன.


101. செய்யாமற் செய்த வுதவிக்கு வையகமும்
வானகமு மாற்ற லரிது.

(இ-ரை.) செய்யாமல் செய்த உதவிக்கு - தன்னிடத்திலிருந்து ஓர் உதவியையும் முன்பு பெறாதிருந்தும் ஒருவன் தனக்குச் செய்த உதவிக்கு: வையகமும் வானகமும் ஆற்றல் அரிது - 'மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் அவை ஈடு செய்தல் அரிது.