பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - இல்லறவியல் - செய்ந்நன்றியறிதல்

95


கைம்மாறுகளெல்லாம் எத்துணைச் சிறந்தன வாயினும், முதல் வினையைப் பின்பற்றின வழிவினைகளாதலின் முதல் வினைக்கு ஈடாகா என்பது கருத்து.

செய்யாமைச் செய்த வுதவி யென்று பாடமோதி, மறுத்துதவ மாட்டாமை யுள்ளவிடத்துச் செய்த வுதவி யென்று பொருளுரைக்கத் தேவையில்லை. அப் பொருள்.

"கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ வுலகு"

(211)

என்னுங் குறளாற் பெறப்படுதலால்.

102. காலத்தினாற்செய்த நன்றி சிறிதெனினு
ஞாலத்தின் மாணப் பெரிது.

(இ-ரை.) காலத்தினால் செய்த நன்றி - ஒருவனது வாழ்க்கைக்கேனும் தொழிற்கேனும் இறுதி நேரும் நெருக்கடி வேளையில் அதை நீக்க இன்னொருவன் செய்த வுதவி; சிறிது எனினும் ஞாலத்தின் மாணப் பெரிது - பொருளளவிலும் முயற்சியளவிலும் சிறிதாயிருந்தாலும், அக் காலநிலை நோக்க நிலவுலகத்தினும் பெரிதாம்.

ஒருவர் செய்த நன்றியை அது செய்யப்பட்ட காலநிலைக்கேற்ப மதிக்க வேண்டுமென்பது கருத்து. 'காலத்தினால்' என்பது காலத்தாலே வந்தான் என்னும் மேலை வடார்க்காட்டு வழக்குப் போன்ற வேற்றுமை மயக்கம்.

103. பயன்றூக்கார் செய்த வுதவி நயன்றூக்கி
னன்மை கடலிற் பெரிது.

(இ-ரை.) பயன் தூக்கார் செய்த வுதவி நயன் தூக்கின் - இவருக்கு இன்னது செய்தால் நமக்கு இன்னது கிடைக்குமென்று ஆராயாது ஒருவர் செய்த வுதவியின் அருமையை ஆய்ந்து நோக்கின், நன்மை கடலின் பெரிது - அதன் நன்மை கடலினும் பெரியதாம். காலத்தினாற் செய்த நன்றி பயன் தூக்கியதாகவு மிருக்கலாமாதலால், பயன் தூக்காது செய்த வுதவியும் ஒரு வகையிற் பெரியதே யென்றார்.