பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

திருக்குறள்

தமிழ் மரபுரை


104. தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்றெரி வார்.

(இ-ரை.) திணைத்துணை நன்றி செயினும் - தினையளவினதாகிய சிற்றுதவியையே ஒருவன் தமக்குச் செய்தானாயினும்; பயன் தெரிவார் பனைத் துணையாக் கொள்வர் - அதன் பயனளவை யறிந்தவர் அதைப் பனையளவினதாகிய பேருதவியாகக் கருதுவர்.

'தினை'. 'பனை' என்னும் நிலைத்திணைப் பெயர்கள், இங்குச் சிறுமை பெருமை குறிக்கும் அளவைப் பெயர்களாக வந்தன. 'உம்மை' இழிவுசிறப்பு. ஒருவர் செய்த வுதவியைப் பொருளளவிலும் முயற்சியளவிலும் நோக்காது பயனளவில் நோக்க வேண்டுமென்பது, இங்குக் கூறப்பட்டது.

105.உதவி வரைத்தன் றுதவி யுதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

(இ-ரை.) உதவி உதவி வரைத்து அன்று - கைம்மாறான உதவி காரணத்தானும் பொருளானுங் காலத்தானுமாகிய மூவகையானும் முன் செய்த உதவியளவினதன்று: உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து - அதனைச் செய்வித்துக் கொண்டவர்தம் அமைதியளவிற்று.

பெரும்பாலும் இக் கருத்தைத் தழுவியே மணக்குடவ பரிதி காளிங்கர் உரைகளும் உள்ளன.

இக் குறள் கைம்மாறு பற்றியது என்பதற்கு அதில் ஒரு குறிப்புமில்லை. செய்யாமற் செய்ததும் காலத்தினாற் செய்ததும் கைம்மாறு கருதாமற் செய்ததும் பயனளவிற் பெரியதுமான நன்றிகள் இதுவரை கூறப்பட்டன. அவை யல்லாது, பெரியார்க்குச் செய்த நன்றி யென்றும் ஒரு சிறப்புவகை யுளது. அதுவே இக் குறளிற் கூறப்பட்டுள்ளது.

உதவி உதவி வரைத்தன்று - ஒருவர் ஒருவர்க்குச் செய்த நன்றி மேற் கூறிய நால்வகை யுதவியளவினது மட்டுமன்று: உதவி செயப்பட்டார் சால் பின் வரைத்து - நன்றி செய்யப்பட்டவரின் மேன்மையளவினது மாகும்.

இது,


"இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்"

(87)

என்னுங் கருத்தை யொத்தது. அங்குக் கூறியது விருந்தோம்பல்பற்றியது. இங்குக் கூறியது வேறுவகை நன்றிபற்றியது. எச்சவும்மை தொக்கது.