பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

திருக்குறள்

தமிழ் மரபுரை



157. திறனல்ல தற்பிறர் செய்யினு நோநொந்
தறனல்ல செய்யாமை நன்று.

(இ-ரை.) திறன் அல்ல தன் பிறர் செய்யினும் - செய்யத்தகாத கொடிய வற்றைத் தனக்குப் பிறர் செய்தாராயினும்; நோ நொந்து அறன் அல்ல செய்யாமை நன்று - அதனால் அவர்க்கு வரும் துன்பத்திற்காக உளம் நொந்து அறனல்லாதவற்றைத் தான் அவர்க்குச் செய்யாதிருத்தல் ஒருவனுக்கு நல்லதாம்.

உம்மை உயர்வுசிறப்பு. துன்பத்திற்கு நோதலை.

"தம்மை யிகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற் றெம்மை யிகழ்ந்த வினைப்பயத்தால் - உம்மை எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று பரிவதூஉம் சான்றோர் கடன்" (58)

என்னும் நாலடியார்ச் செய்யுளால் அறிந்துகொள்க.

158. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.

(இ-ரை.) மிகுதியான் மிக்கவை செய்தாரை - செருக்கினால் தமக்குத் தீயவை செய்தவரை; தாம் தம் தகுதியான் வென்று விடல் - தாம் தம் பொறையினால் வென்று விடுக.

சரிக்குச் சரி தீங்கு செய்யும் இழுக்க வெற்றி ஒழுக்கத் தோல்வி யென்றும்; தீயவை செய்தாரைப் பொறுத்துக் கொள்ளும் ஒழுக்கவெற்றியே உண்மையான வெற்றியென்றும் உணர்த்தற்குத் 'தகுதியான் வென்று விடல்' என்றார், 'விடல்' வியங்கோள் வினை.

159. துறந்தாரிற் றூய்மை யுடைய ரிறந்தார்வா
யின்னாச்சொ னோற்கிற் பவர்.

(இ-ரை.) இறந்தார் வாய் இன்னாச் சொல் நோற்கிற்பவர் - நெறி கடந்த கீழ்மக்களின் வாயினின்று வரும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்ளும் ஆற்றலுடைய மேன்மக்கள்; துறந்தாரின் தூய்மை உடையர் இல்லறத்தின்கண் நின்றாலும் துறவியர் போல மனத்தூய்மை உடையராவர்.