பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அறத்துப்பால் - இல்லறவியல் - அழுக்காறாமை

119



  'வாய்' என மிகைபடக் கூறியது, கீழோர் வாயினின்று தீய சொற்களே மிகுதியாக வரும் என்பதை உணர்த்தற்கு. ஐந்தாம் வேற்றுமை பின்னுருபு உறழ்பொருளிற்கே யுரியதாதலால். துறந்தாரைவிடத் தூயர் எனினுமாம். சுடுகின்ற வெயிலைப் பொறுத்தலினும் சுடுகின்ற சொல்லைப் பொறுத்தல் அரிதாதல் காண்க. 'கில்' ஆற்றலுணர்த்தும் இடைநிலை. வெயில் பிறப்பிக்காத சினத்தைச் சுடுசொல் பிறப்பித்தலால், அதைப் பொறுத்துக்கொள்ளுதலே மிகுந்த மனத்தூய்மையைக் காட்டும் என்பது கருத்து. 

160.உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லு
மின்னாச்சொ னோற்பாரிற் பின்.

(இ-ரை.) உண்ணாது நோற்பார் பெரியர் - நோன்பினால் உணவைத் தவிர்ந்து பசியையும் தட்பவெப்பத்தையும் பொறுத்துக்கொள்ளும் துறவியர் மக்கட்குட் பெரியவரே: பிறர் சொல்லும் இன்னாச் சொல் நோற்பாரின் பின் - ஆயின் அவர் பெரியவராவது பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக்கொள்ளும் இல்லறத்தார்க்கு அடுத்தபடியே.

        பிறர் என்றது தீயவரை. இன்பம் பெறுதற்குரிய இல்லறத்திலிருந்து கொண்டே துன்பம் பொறுத்தற்குரிய துறவியரினும் மிகுந்த பொறையை மேற்கொள்வதால், முதற்படியாகப் பெரியவர் என்றார்.

அதி. 17-அழுக்காறாமை

  அதாவது, பிறராக்கங் கண்டு பொறாமைப்படாமை. பொறாமை என்பது பொறுத்தலின் மறுதலையாதலால், அதை விலக்குதற்கு இவ்வதிகாரம் பொறையுடைமையின் பின் வைக்கப்பட்டது.
  அழுங்குதல் வருந்துதல் அல்லது துன்புறுதல். அழுங்குவது அழுக்கு. அது உறு என்னும் துணைவினை பெற்று அழுக்குறு என நிற்கும். அழுக்குறுதல் பிறராக்கங் கண்டு பொறாது வருந்துதல். நாசமுறு என்னும் வினை நாசமறு என்று உலக வழக்கில் திரிந்தாற் போன்று, அழுக்குறு என்பதும் அழுக்காறு என இலக்கிய வழக்கில் திரிந்தது. “அழுக்கற் றகன்றாரு மில்லை” (170) என வள்ளுவரே கூறுதல் காண்க. நாசமுற்றுப் போவான் என்பது நாசமற்றுப் போவான் என்றே வழங்குதல் காண்க.
 அழுக்கறு என்னும் கூட்டுவினை அழுக்காறு என நீண்டு தொழிற் பெயராகும். அது முதனிலை திரிந்த தொழிற்பெயர். அழுக்காறு கடும்