பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

திருக்குறள்

தமிழ் மரபுரை



பொறாமை. அழுக்கறாமை என்னும் எதிர்மறைத் தொழிற்பெயர் அழுக் காறாமை என நீண்டு வழங்குகின்றது. இது வராமை தராமை என்பன வாராமை தாராமை என நீண்டது போன்றது.

161. ஒழுக்காறாக் கொள்க வொருவன்றன் னெஞ்சத்
தழுக்கா றிலாத வியல்பு.

(இ-ரை.) ஒருவன் தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு - ஒருவன் தன் நெஞ்சத்திற் பொறாமை யில்லாத தன்மையை: ஒழுக்கு ஆறாக் கொள்க - தனக்குரிய ஒழுக்க நெறியாகக் கொள்க. இயல்பு இயல்பான தன்மை. ஒழுக்காறாக் கொள்ளுதல் உயிரினுஞ் சிறப்பாகப் பேணிக் காத்தல்.

162. விழுப்பேற்றி னஃதொப்ப தில்லையார் மாட்டு
மழுக்காற்றி னன்மை பெறின்.

(இ-ரை.) யார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின் - யாரிடத்தும் பொறாமையில்லா தொழுகுதலை ஒருவன் பெறுமாயின்; விழுப் பேற்றின் அஃது ஒப்பது இல்லை - அவன் பெறுஞ் சிறந்த பேறுகளுள் அதை யொப்பது வேறு ஒன்றும் இல்லை. 'யார் மாட்டும்' என்றதால், பகைவரிடத்தும் பொறாமை கொள்ளுதல் விலக்கப்பட்டது.

163. அறனாக்கம் வேண்டாதா னென்பான் பிறனாக்கம்
பேணா தழுக்கறுப் பான்.

(இ-ரை.) ஆக்கம் அறன் வேண்டாதான் என்பான் - இம்மைக்கும் மறுமைக்கும் வேண்டிய செல்வமும் அறமும் ஆகிய பேறுகளைத் தனக்கு வேண்டாதவனென்று சொல்லப்படுகின்றவன்; பிறன் ஆக்கம் பேணாது அழுக்கறுப்பான் பிறன் செல்வங் கண்டவிடத்து அதற்கு மகிழாது பொறாமைப்படுபவனாவன். - பொறாமைக்காரன் பிறனுக்கு ஒரு தீங்குஞ் செய்ய இயலாது தனக்கே கேட்டை வருவித்துக் கொள்கின்றான் என்பது, இதனாற் கூறப்பட்டது.

164. அழுக்காற்றி னல்லவை செய்யா ரிழுக்காற்றி
னேதம் படுபாக் கறிந்து.