உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

திருக்குறள்

தமிழ் மரபுரை


தன்மையவான வேளாண்மைச் செயல்களைச் செய்யவியலாது அமைதி யற்றிருக்கும் நிலைமையே.

அமைதியற்றிருக்கும் நிலைமையாவது வருந்துதல். ஒப்புரவு செய்யவியலாதவாறு செல்வம் அற்றவிடத்து, பிறரை நுகர்வியாமை பற்றியேயன்றித் தான் நுகராமைபற்றி வருந்துவதில்லை யென்பதாம்.

220. ஒப்புரவி னால்வருங் கேடெனி னஃதொருவன்
விற்றுக்கோட் டக்க துடைத்து.

(இ-ரை.) ஒப்புரவினால் கேடும் வரும் எனின் - ஒப்புரவினால் ஒருவனுக்குப் பொருட்கேடு வருமாயின்; அஃது ஒருவன் விற்றுக்கோள் தக்கது உடைத்து அக் கேடு ஒருவன் தன்னை விற்றாகிலுங் கொள்ளத்தக்க தகுதியையுடையதாம்.

ஒப்புரவினால் வருங் கேடு. ஒருவராலும் பழிக்கப்படாமல் இவ்வுலகிற் புகழும் மறுமைக்கு அறமும் விளைத்தலால், ஒரு சிறந்த பேறே யன்றி இழப்பன்று என்பதாம். அப் பேற்றின் சிறப்பை மிகுத்துக் காட்டற்கே தன்னை விற்றுங் கொள்ளத்தக்க தென்றார்.


“களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்ப்
பாடின் பனுவற் பாண ருய்த்தெனக்
களிறில வாகிய புல்லரை நெடுவெளிற்
கான மஞ்ஞை கணனொடு சேப்ப
ஈகை யரிய இழையணி மகளிரொடு
சாயின் றென்ப ஆஅய் கோயில்
சுவைக்கினி தாகிய குய்யுடை யடிசில்
பிறர்க்கீ வின்றித் தம்வயி றருத்தி
உரைசா லோங்குபுக ழொரீ இய
முரைசுகெழு செல்வர் நகர்போ லாதே”

(புறம்.127)

என்னும் ஆய்வள்ளல் ஒப்புரவினால் அடைந்த பொருட்கேட்டைத் தெரி விப்பதாம்.

அதி. 23 - ஈகை

அதாவது, செல்வர் வறியோரான இல்லார்க் கீதலும் இரப்போர்க்கிடுதலுமாம். மூவகையான ஈதல்வகையுள், ஒப்புரவு முன்னர்க் கூறப்பட்ட-