உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - இல்லறவியல் - ஈகை

143



மையால் அடுத்த இரண்டையுந் தழுவும் ஈகை அதன்பின் இங்கு வைக்கப் பட்டது.

இல்லார் புலவர் உறவினர் முதலியோர்; இரப்போர் குருடர் முடவர் முதலியோர்.

221. வறியார்க்கொன் றீவதே யீகைமற் றெல்லாங்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.

(இ-ரை.) வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை - பொருளில்லாதவரும் திருப்பிச் செய்ய இயலாதவருமான ஏழையர்க்கு அவர் வேண்டிய தொன் றைக் கொடுப்பதே ஈகை என்னும் அறச்செயலாம்; மற்று எல்லாம் குறி யெதிர்ப்பை நீரது உடைத்து - மற்றக் கைம்மாறு கருதிய கொடுப்பெல்லாம் அளவுகுறித்துக் கடன் கொடுக்கும் தன்மையதாம்.

குறியெதிர்ப்பையாவது அளவு குறித்துக் கொடுத்து அவ்வளவில் திரும்பப் பெறுங் கடன். நீரது என்பதில் அது என்பது முதனிலைப் பொரு ளீறு "ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே" (128) என்னும் தொல்காப்பிய நெறிப் படி, ஈகை என்னும் சொல் சிறப்பாகத் தாழ்ந்தோர்க்கு ஈதலைக் குறிக்கும்.

222. நல்லா றெனினுங் கொளறீது மேலுலக
மில்லெனினு மீதலே நன்று.


(இ-ரை.) கொளல் நல் ஆறு எனினும் தீது - பிறரிடத்தினின்று வாங்குவது வீட்டுலகத்திற்கு நல்வழியென்று அறநூல் கூறினும் வாங்குவது தீயது: மேல் உலகம் இல் எனினும் ஈதலே நன்று - பிறருக்குக் கொடுப்பதால் அவ் வுலகத்தை அடைய முடியாதென்று அந் நூல் கூறினும், கொடுத்தலே நல்லது. உம்மை ஈரிடத்தும் எதிர்மறை. கொடுத்தல், தருதல் என்னும் சொற் களினும் ஈதல் என்னும் சொல்லே இவ் வதிகாரத்திற்கு ஏற்றதாம்.

223. இலனென்னு மெவ்வ முரையாமை யீதல்
குலனுடையான் கண்ணே யுள.

(இ-ரை.) இலன் என்னும் எவ்வம் உரையாமை - யான் ஏழையென்று இரப்போன் சொல்லும் இழிவுரையைத் தான் பிறனிடத்துச் சொல்லாமையும்;