பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அறத்துப்பால் - இல்லறவியல் - புகழ்

155


3

துறவறவியல்

இல்லற வின்பத்தைத் துய்த்தறியாதும் துய்த்தும் உலக வாழ்க்கையில் அல்லது பிறவித் துன்பத்தில் வெறுப்பும் வீடுபேற்றில் அல்லது பேரின்பத்துய்ப்பில் வேட்கையுங் கொண்டு, மாணிய (பிரமசரியப் பருவத்திலேனும் மனையற நிலையிலேனும் முறியன் (தபுதாரன்) நிலையிலேனும் மூப்பி லேனும் துறவு பூண்டு அதற்குரிய அறங்களைக் கடைப்பிடித்து. நான் எனது என்னும் இருவகைப் பற்றையும் விட்டுப் பிறவியினின்று விடுதலை பெறுதலைக் கூறும் சிறு பகுதி, துறவறவியல் எனப்பட்டது.

இல்லறத்தாலும் வீடுபேறுண்டாமேனும், அதற்குரிய பொறுப்பு மிகுதி யாதலானும், அது ஆசை வளர்தற்கு இடந்தரலானும், அப் பொறுப்பைத் தாங்கவும் ஆசையை அடக்கவும் ஆற்றலில்லார் தனிவாழ்க்கையை விரும்பித் துறவறத்தை மேற்கொள்வர் என அறிக.

துறவறத்திற் குரியனவாகத் திருக்குறளிற் சொல்லப்பட்டுள்ள அறங்கள் அருளுடைமை, புலால் மறுத்தல், கூடா ஒழுக்கம், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, துறவு, அவாவறுத்தல் என்பனவாம்; பயிற்சிகள் தவம், மெய்யுணர்தல் என்பனவாம். இவையெல்லாம் அருள், தவம், துறவு, ஓகம் (யோகம்) என்னும் நான்கனுள் அடங்கும் ஆதலால் இவற்றை நால்வாயில் எனலாம்.

அருளுடைமை, புலால் மறுத்தல், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை என்னும் அறங்களும் தவம் என்னும் பயிற்சியும், இல்லறத்திற்கும் ஏற்குமேனும்; அவற்றை முற்றக் கைக்கொள்வதும் நெடுகக் கடைப்பிடிப்பதும் இல்லறத்தில் இயலாமையின், அவை துறவறத்திற்கே முற்றளவாக வுரியனவும் இன்றியமையாதனவுமாகக் கொள்ளப்பட்டன.

ஊர்காவலர் மாறுகோலம் பூண்டு மறைவாகச் சென்று குற்றவாளியரைப் பிடிப்பதும், ஒற்றர் வேறு கோலத்திற் சென்று பகைவர் நிலைமை

12