பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

158

திருக்குறள்

தமிழ் மரபுரை



அதி.25 - அருளுடைமை

அதாவது, தொடர்பு கருதாது அறுவகைப்பட்ட எல்லா வுயிர்களிடத் தும் ஒப்பக் கொள்ளும் இரக்கம். இல்லறத்திற்கு அன்புடைமைபோல் துறவறத்திற்கு அருளுடைமை அடிப்படை யறமாம். அதனால் இது முதற் கண் கூறப்பட்டது. இதனால், அன்பு போன்றே அடைக்குந் தாழின்றிச் செயலாக வெளிப்படும் அருளறம் வீடுபேற்றிற்கு இன்றியமையாத தென்பதும், அறிவுமட்டும் போதா தென்பதும் பெறப்படும்.

241. அருட்செல்வஞ் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணு முள.

(இ-ரை.) செல்வத்துள் செல்வம் அருள் செல்வம் - செல்வங்களெல்லா வற்றுள்ளுஞ் சிறந்தது அருளாகிய செல்வமே: பொருள் செல்வம் பூரியார் கண்ணும் உள - மற்றப் பொருளாகிய செல்வங்கள் கீழ்மக்களிடத்திலும் உள்ளன.

செல்வம் போன்ற பண்பைச் செல்வ மென்றார். உம்மை இழிவுசிறப்பு.

242. நல்லாற்றா னாடி யருளாள்க பல்லாற்றாற்
றேரினு மஃதே துணை.

(இ-ரை.) நல் ஆற்றான் நாடி அருள் ஆள்க - உத்திக்குப் பொருத்த மான நல்ல அளவைகளால் ஆராய்ந்து பார்த்து அருளை மேற்கொள்க; பல் ஆற்றால் தேரினும் அஃதே துணை பல்வேறு சமயநெறிகளால் ஆராய்ந்தாலும் இறுதியில் அவ் வருளே துணையாக முடியும்.

காட்சி, கருத்து, ஒப்பு, உரை, இன்மை, எதிர்நிலை (அருத்தாபத்தி), சார்பு (இயல்பு). உலகுரை, ஒழிபு, உண்மை என அளவைகள் மொத்தம் பத்தென்பர். அவை யாவும் முதல் நான்கனுள் அடங்கும். அன்பின் முதிர்ச்சி யாகிய அருள் எல்லார்க்கும் ஒப்ப முடிந்த அறப்பண்பாதலானும், இம்மை மறுமை வீடாகிய மும்மைக்கும் உதவுதலானும், அஃதே துணை என்றார். உத்தியாவது பகுத்தறிவிற்குப் பொருந்து முறை. உத்தல் = பொருந்துதல். உத்தி யென்பது வடமொழியில் யுக்தி எனத் திரியும்.

243. அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை யிருள்சேர்ந்த
வின்னா வுலகம் புகல்.