பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

162

திருக்குறள்

தமிழ் மரபுரை



அது தோன்றுமாறும் அதனால் அருள் பிறக்குமாறும் ஒரு வழி சொல்லப் பட்டது.

அதி. 26- புலான்மறுத்தல்

அதாவது, அருளுடைமைக்கு மாறானதும் முரட்டுக் குணத்தை உண்டாக்குவதுமான ஊனுணவைத் தவிர்த்தல். ஊனுணவு உயிர்க்கொலையால் வருவதாலும் கொலைவினை துறவறத்திற்கு மாறானதாதலாலும் கொலையைத் தவிர்க்கக்கூடிய குணம் அருளுடைமையே யாதலாலும், இது அதன்பின் வைக்கப்பட்டது.

251. தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பா
னெங்ஙன மாளு மருள்.

(இ-ரை.) தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான் - தன் உடம்பைப் பெரிதாக்குவதற்காகத் தான் வேறோர் உயிரின் உடம்பைக் கொன்று தின்பவன்; எங்ஙனம் அருள் ஆளும் - எங்ஙனந்தான் அருளைக் கையாள்பவன் ஆவன்.

உடம்பைப் பருக்க வைத்தற்குக் கொலையில்லாத உணவு நிரம்ப விருத்தலானும், உடம்பை எங்ஙனம் பேணினும் அது அழிந்து போவதாதலானும், ஊனுணவு பெறுதற்கு ஓர் உயிரை எள்ளளவும் இரக்கமின்றிக் கொல்ல வேண்டியிருத்தலானும், குற்றமற்ற வுயிரிகளை மேன்மேலுங் கொல்வது கொடுமையினுங் கொடுமையாதலானும், 'எங்ஙனம் ஆளும் அருள்' என்றார். ஆளவே ஆளான் என்பது விடை. உயிருள்ளது உயிரி (பிராணி).

252. பொருளாட்சி போற்றாதார்க் கில்லை யருளாட்சி
யாங்கில்லை யூன்றின் பவர்க்கு.

(இ-ரை.) பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை - பொருளைக் கையாளுதல் அதைப் பாதுகாவாதார்க்கு இல்லை: ஆங்கு அருள் ஆட்சி ஊன் தின்பவர்க்கு இல்லை - அதுபோல அருளைக் கையாளுதல் ஊன் உண்பவர்க்கு இல்லை. ஊனுண்பவர்க்கு அருளில்லை யென்பது இங்கு முடிந்த முடிபாகக் கூறப்பட்டது. இம் முடிவிற்கு முந்தின குறள் ஏதுவாம்.