அறத்துப்பால் - துறவறவியல் - புலான்மறுத்தல்
163
253. படைகொண்டார் நெஞ்சம்போ னன்றூக்கா தொன்ற
னுடல்சுவை யுண்டார் மனம்.
(இ-ரை.) படை கொண்டார் நெஞ்சம் போல் - பகைவரைக் கொல்வதற்குக் கொலைக்கருவியைக் கையிற் கொண்டவரின் மனம் அதனாற் செய்யுங் கொலையை யன்றி அருளை நோக்காதது போல: ஒன்றன் உடல் சுவை உண்டார் மனம் நன்று ஊக்காது - ஓர் உயிரியின் உடலைச் சுவையாக வுண்டவர் மனம் அவ் வூனையன்றி அருளை நோக்காது.
ஊன் சுவையாயிருத்தல் காயச் சரக்கை மட்டுமன்றி உயிரியின் இனத்தையும் பொறுத்ததாம். ஊனுண்பார்க்கு அருளின்மை உவமை வாயிலாகவும் காட்டப்பட்டது.
கதறினும் தொண்டை கீளக் கத்தினும் புள்ளும் மாவும்
பதறினும் நெஞ்ச மெல்லாம் பக்கமுந் தலையுங் காலும்
உதறினும் அங்கு மிங்கும் ஓடினும் அரத்தம் பீறிச்
சிதறினும் இரக்கங் கொள்ளார் சிதைத்துடல் சுவைக்க வுண்டார்.
என்னும் செய்யுள் இங்கு நினைவுகூரத்தக்கது.
254. அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல் பொருளல்ல தவ்வூன் றினல்.
(இ-ரை.) அருள் யாது எனின் கொல்லாமை - அருள் என்பது என்னது எனின் கொல்லாமை; அல்லது (யாது எனின்) கோறல் -அருளல்லாதது எதுவெனின் கொல்லுதல்; அவ் வூன் தினல் பொருள் அல்லது - ஆதலால், அக் கொல்லுதலால் வந்த ஊனைத் தின்பது கரிசு (பாவம்).
கொல்லாமை, கோறல் ஆகிய கருமகங்களை (காரியங்களை) அருள் அல்லது எனக் கரணகங்களாக (காரணங்களாக)க் கூறியது சார்ச்சி (உபசார்) வழக்கு. அறமும் பொருளெனப்படுவதால் அறமல்லாத கரிசைப் பொருளல்லது என்றார். அவ் வூன் என்ற சேய்மைச் சுட்டு முன்னின்ற கோறலைத் தழுவியது. மணக்குடவர் முதலடியை நிரனிறையாகப் பகுக்காது ஆற்றொழுக்காகக் கொண்டு "அருளல்லது யாதெனின் கொல்லாமையைச் சிதைத்தல்" என்று பொருள் கூறுவர்.
255.உண்ணாமை யுள்ள துயிர்நிலை யூனுண்ண
வண்ணாத்தல் செய்யா தளறு.