பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

திருக்குறள்

தமிழ் மரபுரை


இப் பாடம், அவிசொரிந்து ஆயிரம் வேட்டலன்று; ஒன்றன் உயிர் செகுத்துண்ணாமையே நன்று என்று பொருள் தருதல் காண்க. இதில் ஏகாரம் தொக்கது.

260.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
யெல்லா வுயிருந் தொழும்.

(இ-ரை.) கொல்லான் புலாலை மறுத்தானை - ஓருயிரையுங் கொல்லாதவனாய்ப் புலாலையும் உண்ணாதவனை; எல்லா உயிரும் கைகூப்பித்தொழும் - எல்லா மக்களும் கைகுவித்து வணங்குவர்.

கொல்லாதவன் புலாலுண்பவனாகவும் புலாலுண்ணாதவன் கொல்பவனாகவும் இருக்கலா மாதலால், அவற்றாற் பயனின்மை கருதி ஈரறங்களையும் உடன் கூறினார். கைகூப்பித் தொழுதல் மற்ற வுயிர்கட் கியையாமையின் மக்களுயிர் எனக் கொள்ளப்பட்டது. உயிர் என்பது சொல்லால் அஃறிணை யாதலின், பல்லோர் படர்க்கையிற் செல்லாச் செய்யுமென்னும் முற்று இங்குச் செல்வதாயிற்று. ஈரறங்களையுங் கடைப்பிடிப்பார். மறுமையில் (தேவர் நிலையில்) மட்டுமன்றி இம்மையில் மக்கள் நிலையிலும் பிறரால் தெய்வமாக மதிக்கப்படுவர் என்பது கருத்து.

அதி. 27-தவம்

அதாவது, உடம்பு கொழுத்தால் மனம் ஐம்புல வின்பத்தையே நாடுமாதலாலும், மதயானைபோல் அடங்கா தாதலாலும், அதையடக்கி இறைவன்மேற் செலுத்துவதற்குத் தோதாக உண்ணா நோன்பாலும் தட்பவெப்பம் பொறுத்தல் முதலிய கடும் பயிற்சிகளாலும் உடம்பை வாட்டுதல். உடம்பை யொடுக்கி யடக்குவதில் புலான்மறுத்தல் மென்மையானதாகவும் தவம் வன்மையானதாகவும் மிருத்தலால், இஃது அதன்பின் வைக்கப்பட்டது.

தவம் இல்லறத்தார்க் குரியதும் துறவறத்தார்க் குரியதும் என இருவகைப்படும். அவற்றுள் முன்னது எண்வகை யுறுப்புகளைக் கொண்டு தவம் அல்லது நோன்பு என்று பெயர் பெறுவது: பின்னது ஓகத்தின் (யோகத்தின்) எண்வகை யுறுப்புகளுள் ஒன்றாகக் கொள்ளப்படுவது.

இல்லறத்தார் பிள்ளைப்பேறும் உடல்நலமுங் கருதி உண்டி சுருக்கி நாடு நகரங்களிலுள்ள கோவில்களில் வழிபடுவது நோன்பு என்றும், காட்டில் தங்கிக் கடுமையாக வாழ்ந்து சிறிது காலம் வழிபடுவது தவம் என்றும் சொல்லப்படும்.