பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அறத்துப்பால் - துறவறவியல் - தவம்

167


கணவனும் மனைவியும் காட்டிலுள்ள முனிவரை யடுத்துத் தொண்டு செய்தபின், அவர் தந்த கனியை யுண்டு மனைவி கருவுற்றுப் பிள்ளை பெற்றதாகச் சொல்லப்படுவதெல்லாம், கூடாவொழுக்கத்தினரான ஆரியர் செய்த சூழ்ச்சிகளே என அறிக.

மறுமையில் விண்ணுலக வின்பம் நுகரும்பொருட்டு இம்மையிற் காட்டில் வாழ்ந்து செய்யும் எண்வகை யுறுப்புத் தவம்.

தவம் என்ற சொற்கே எரித்தல் என்றுதான் பொருள். துலங்குதல் = விளங்குதல். துலங்கு - துளங்கு= திகழ், துள - தள. தளதளத்தல்=திகழ்தல். தள - தழல் - தணல். தழ - தக. தகதகவெனல் = ஒளி வீசுதல். தக - தகம் - தங்கம் = விளங்கும் பொன். தக - திக - திகழ் - திங்கள் = இரவில் ஒளி தரும் சுடர். தகம் = எரிவு, சூடு. தகம் - தவம் = உடலை எரித்தல்போல் வருத்துந் துறவறப் பயிற்சி. க-வ, போலி ஒ.நோ: குழை - குகை - குவை. தக - தஹ் (வ.). தவம் - தபஸ் (வ.). தக - தகை = தாகம். தகம் - தாகம் = உடற் சூட்டால் உண்டாகும் நீர்வேட்கை. தக - தவ - தவி. தவித்தல் = நீர்வேட்கை யுண்டாதல். தாகம் - தாஹ (வ). தவி - தப் (வ). தவம் - தவன் = தவத்தோன். இதற்கு ஒத்த வடிவம் சமற்கிருதத்தில் இல்லை. தபஸ்வின் என்ற வடிவந்தான் உண்டு.

“நீர்பலகான் மூழ்கி நிலத்தசைஇத் தோலுடையாச் சோர்சடை தாழச் சுடரோம்பி - யூரடையார் கானகத்த கொண்டு கடவுள் விருந்தோம்பல் வானகத் துய்க்கும் வழி' (பு.வெ.வாகை.14)

என்னும் புறப்பொருள் வெண்பா மாலைச் செய்யுளால் அறியப்படும். இதையே "நாலிரு வழக்கிற் றாபதப் பக்கமும்” என்று தொல்காப்பியங் (புறத்.20) கூறும். இது பிறவிக்குட்படுவதால் துறவறமாகாது.

கணவனை யிழந்த கற்புடை மனைவியர் நோற்கும் கைம்மை நோன்பு இல்லறத்தின்பாற்படுவதே. இறைவனல்லாச் சிறுதெய்வங்களை நோக்கிச் செய்யும் தவம் பயனில் முயற்சியாம். அத்தெய்வங்களை நோக்கித் தவஞ்செய்து பலர் பல பேறுகளைப் பெற்றதாகக் கூறும் கதைகளெல்லாங் கட்டுக்கதைகளே. இனி, ஊழினாலும் உழைப்பினாலுமே பெறக்கூடிய கல்வி, அரசப் பதவி முதலிய பேறுகளையும், பகைவரைக் கொல்லும் வலிமை, தெய்வத்தையுங் கொல்லுந்திறம் முதலிய ஈவுகளையும், தவஞ் செய்து பெற்றதாகக் கூறுங் கதைகளும் நம்பத்தக்கனவல்ல.