அறத்துப்பால் - துறவறவியல் - வாய்மை
185
வாய்மையைக் கடைப்பிடிப்பவன் தான் செய்யுந் தீவினைகளை யெல்லாம் பிறருக்கு மறைக்காதிருக்க வேண்டுமாதலானும், அவை பிறரால் அறியப்படின் தான் தண்டனை யடைவது திண்ணமாதலானும், ஒவ்வொன்றாக எல்லாத் தீவினைகளையும் விட்டுவிடுவன் என்பது கருத்து.
மணக்குடவர் ஈரடுக்குத் தொடர்களையும் தழாத்தொடராகக் கொள்ளாது தழுவுதொடராகக் கொண்டு, “பொய்யாமையைப் பொய்யாமல் செலுத் துவனாயின், பிற அறங்களைச் செய்தல் நன்றாம்; அல்லது தீதாம்" என்று இக்குறளுக்குப் பொருள் உரைப்பர்.
298. புறந்தூய்மை நீரா னமையு மகந்தூய்மை வாய்மையாற் காணப் படும்.
(இ-ரை.) புறம் தூய்மை நீரான் அமையும் - ஒருவனது உடம்புத் தூய்மை நீரால் உண்டாகும்; அகம் தூய்மை வாய்மையான் காணப்படும் - உள்ளத் தூய்மை வாய்மையால் அறியப்படும்.
புறத்தூய்மை அழுக்குப் போதல்; அகத்தூய்மை குற்றம் நீங்குதல். காணப்படுதல் அறியப்படுதல். காணுதல் என்றது அகக்கண்ணாற் காணுதலை. புறத்தழுக்கும் நீரும்போல அகக் குற்றமும் வாய்மையும் காட்சிப்பொருளன்மையின், அறியப்படும் என்றார். வாய்மையால் அகத்தூய்மை உண்டாகும் வகை மேற்கூறப்பட்டது. துறவியர்க்குப் புறத்தூய்மையினும் அகத்தூய்மையே சிறந்ததென்பதாம்.
299. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
(இ-ரை.) சான்றோர்க்கு எல்லா விளக்கும் விளக்கு அல்ல - ஆன்றவிந் தடங்கிய துறவோர்க்குப் புறவிருள் போக்கும் விளக்குகளெல்லாம் விளக்காகா; பொய்யா விளக்கே விளக்கு - அகவிருள் போக்கும் பொய்யாமையாகிய விளக்கே விளக்காம்.
புறவிருள் போக்கும் விளக்குகள் கதிரவன், நிலா, தீ என்பன. இவை பொய்யாமைபோல் அகவிருள் போக்காமையின், 'பொய்யா விளக்கே விளக்கு' என்றார். அகவிருள் அறியாமை. 'பொய்யா' ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். பொய்யாமையாகிய விளக்கு என்பது உருவகவணி.