186
திருக்குறள்
தமிழ் மரபுரை
முந்திய குறளில் வாய்மை அகத்தழுக்கைப் போக்குவதென்ற கருத்துட்கொண்டு, அதற்கேற்ப வாய்மையை விளக்காக உருவகித்தார்.
300. யாமெய்யாக் கண்டவற்று ளில்லை யெனைத்தொன்றும்
வாய்மையி னல்ல பிற.
(இ-ரை.) யாம் மெய்யாக் கண்டவற்றுள் - யாம் உண்மையான அறங்களாகக் கண்டவற்றுள்; எனைத்து ஒன்றும் - எவ்வகையிலும்; வாய்மையின் நல்ல பிற இல்லை - மெய்ம்மைபோலச் சிறந்த வேறு அறங்கள் இல்லை.
'மெய்யா' என்பதில் ஆக என்னும் வினையெச்ச வீறு 'ஆ' எனக் கடைக்குறைந்து நின்றது. வாய்மை தலைமையான அறமாகச் சொல்லப்பட்டிருப்பதால், 'வாய்மையின்' என்பதிலுள்ள 5ஆம் வேற்றுமையுருபு தனக்குரிய உறழ்ச்சிப் பொருளில் வராது 2ஆம் வேற்றுமைக்குரிய ஒப்புப் பொருளில் வந்ததாகக் கொள்க.
அதி. 31 - வெகுளாமை
அதாவது, ஒருவன்மேற் சினங்கொள்வதற்குக் கரணகம் (காரணம்) இருப்பினும் அதைக் கொள்ளாமை. "உள்ளதைச் சொன்னால் உடம்பெரிச்சல்” என்னும் பழமொழிப்படி, வெகுளி பொய்ம்மைபற்றியும் நிகழ்வதால், வெகுளாமை வாய்மையின்பின் வைக்கப்பட்டது.
301. செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பா னல்லிடத்துக்
காக்கினென் காவாக்கா லென்.
(இ-ரை.) சினம் செல் இடத்துக் காப்பான் காப்பான் - சினம் தாக்கக் கூடிய எளிய இடத்தில் அது எழாதவாறு அருளால் அல்லது அன்பால் தடுப்பவனே உண்மையில் அதைத் தடுப்பவனாவன்; அல் இடத்துக் காக்கின் என் காவாக்கால் என் -அல்லாத வலிய இடத்தில் அது தானே எழாது அடங்குதலால் அதைத் தடுத்தாலென், தடுக்காவிட்டா லென்? இரண்டும் ஒன்றுதானே!
'செல்லிடம்' தவத்தில் தாழ்ந்தவரும் வறியவரும் அதிகாரமில்லாத வருமாம். 'அல்லிடம்' தவத்தில் உயர்ந்தவரும் செல்வரும் அதிகாரத்திற் சிறந்தவருமாம். வலிய இடத்திற் சினங்கொள்வதால் தனக்கே கேடாதலானும், அதை யடக்குவது அறமன்மையானும், 'காக்கினென் காவாக்காலென்' என்றார்.