பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - துறவறவியல் - இன்னாசெய்யாமை

193



(இ-ரை.) மனத்தான் ஆம் மாணா - மனத்தோடு கூடிய தீய செயல்களை; எஞ்ஞான்றும் யார்க்கும் எனைத்தானும் செய்யாமை தலை - எக்காலத்தும் எவர்க்கும் எத்துணைச் சிறிதும் செய்யாதிருத்தல் தலைமையான அறமாம்.

மனத்தோடு கூடிய செயலாவது அறிந்து செய்யுஞ் செயல். மாணுதல் நன்றாதல். 'மாணா' பலவின்பால் எதிர்மறை வினையாலணையும் பெயர். வலிமையுள்ள காலத்தையும் உட்படுத்த 'எஞ்ஞான்றும்' என்றும், எளியாரையும் விலக்க 'யார்க்கும்' என்றும், 'சிறுபொறி பெருந்தீ' யாதலானும், சிறுநஞ்சும் பெருந்தீங்கு செய்தலானும், சிறு வினையும் தீயது தீவினையே என்று கருதி 'எனைத்தானும்' என்றும் கூறினார்.

318. தன்னுயிர்க் கின்னாமை தானறிவா னென்கொலோ மன்னுயிர்க் கின்னா செயல்.

(இ-ரை.) தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் - பிறர் செய்யுந்தீயவை தனக்குத் தீயனவாயிருக்குந் தன்மையைப் பட்டறிகின்றவன்; மன் உயிர்க்கு இன்னா செயல் என்கொல் - தான் மட்டும் மற்றவர்கட்குத் தீயவை செய்தல் என்ன கரணியம் (காரணம்) பற்றியோ!

இன்ப துன்ப நுகர்ச்சித்திறம் எல்லாவுயிர்க்கும் ஒன்றே யாதலால், தன்னுயிர்க்குத் தீங்கானது மற்றவுயிர்க்கும் தீங்காகுமென்று அறிந்து அதை விலக்க வேண்டியவன் என்னும் கருத்துத் தோன்றத் 'தானறிவான்' என்றும், பகுத்தறிவுள்ள உயர்திணையைச் சேர்ந்தவன் இங்ஙனஞ் செய்வது மயக் கத்திற்கிடமானது என்பது தோன்ற 'என்கொலோ' என்றும் கூறினார். 'கொல்' ஐயம். 'ஓ' அசைநிலை; மயக்கம் எனினுமாம். 'மன்' மற்று என்னும் இடைச் சொல்லின் மூலம், மற்ற என்னும் பொருளது.

319. பிறர்க்கின்னா முற்பகற் செய்யிற் றமக்கின்னா பிற்பகற் றாமே வரும்.

(இ-ரை.) பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் - ஒருவர் பிறருக்குத் தீயவற்றை ஒரு பகலின் முற்பகுதியிற் செய்வாராயின்; தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும் - அதன் விளைவாகத் தமக்குத் தீயவை அப் பகலின் பிற்பகுதியில் அவர் செய்யாமல் தாமே வரும்.

பகலின் முன்பின்னைக் குறிக்கும் 'முற்பகல்', 'பிற்பகல்' என்பன. பின்முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகை. இலக்கணப்போலி