பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

194

திருக்குறள்

தமிழ் மரபுரை



என்பதும் இதுவே. விரைந்து வருதலை யுணர்த்தப் 'பிற்பகல்' என்றும், தீமை செய்யப்பட்டவ ரல்லாத பிறரிடத்தினின்றும் வருமாதலால் 'தாமே வரும்' என்றும் கூறினார். அத்தகைய வினைகளைச் செய்யற்க என்பது கருத்து.

"முற்பகற் செய்தான் பிறன்கேடு தன்கேடு பிற்பகற் காண்குறூஉம் பெற்றிய காண்" (சிலப். 21: 3-4)

என்று கண்ணகி கூற்றாக, நெடுஞ்செழியன் முடிவை இக் குறட்கு இளங்கோவடிகள் எடுத்துக்காட்டியிருத்தல் காண்க.

இனி, "தான் வெட்டின குழியில் தானே விழுவான்" என்பதற்கேற்ப ஒருவன் பிறருக்கு முற்பகல் செய்த தீமைகளே பிற்பகலில் தனக்குத் தீமையாகத் திரும்பி வரும் என்று பொருளுரைப்பினுமாம்.

320.நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர்.

(இ-ரை.) நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம் - துன்பங்க ளெல்லாம் முற்பிறப்பினும் இப்பிறப்பினும் பிறவுயிர்கட்குத் துன்பஞ் செய்தாரையே சார்வனவாம்: நோய் இன்மை வேண்டுபவர் நோய் செய்யார் - ஆதலால், தம்முயிர்க்குத் துன்பம் வேண்டாதவர் பிறிதோர் உயிர்க்குந் துன்பஞ் செய்யார்.

"தன்வினை தன்னைச் சுடும்”. “வினை விதைத்தவன் வினையறுப்பான்" ஆதலால், தன்னலம் பற்றியேனும் பிறருக்குத் தீமை செய்யாதிருக்க என்று படர்க்கையில் வைத்துக் கூறினார். இதில் அமைந்துள்ள அணி சொற்பொருட் பின்வருநிலை.

அதி. 33 - கொல்லாமை

அதாவது, இல்லறத்தில் அரசன் கொலைத் தண்டனையும் போர்த் தொழிலுந் தவிர மற்ற வகைகளில் ஈரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் வரை எவ்வுயிரையுங் கொல்லாமையும், துறவறத்தில், சிறப்பாக இறுதிநிலையில், ஓரறிவுயிரையுங் கொல்லாமையும் ஆம்.

இன்னாதவற்றுள் மிகக் கொடியது கொலையாதலாலும், ஓரறி வுயிர்க்கொலை துறவறத்தின் இறுதிநிலையிலேயே ஒழிக்கக் கூடிய தாதலாலும், இது இன்னா செய்யாமையின் பின் வைக்கப்பட்டது.