அறத்துப்பால் - துறவறவியல் - கொல்லாமை
195
மரக்கறியுணவும் ஓரறி வுயிர்க்கொலையால் வருவதாலும், முளைக்கவுந் துளிர்க்கவும் கூடிய ஒவ்வொரு விதையும் நிலைத்திணை யுறுப்பும் முட்டைபோன் றிருத்தலாலும், பிறர் சமைத்த மரக்கறி யுணவுண்பதும், பிறர் கொன்ற வுயிரியின் ஊனைத் தின்பது போலா மாதலாலும், துறவியர் விரும்புவது வீட்டுலக வாழ்க்கையேயன்றி இவ்வுலக வாழ்க்கையன் றாதலாலும், முற்றத் துறந்த முழு முனிவர்,
"கனியேனும் வறியசெங் காயேனு முதிர்சருகு கந்தமூ லங்களேனும் கனல்வாதை வந்தெய்தி னள்ளிப் புசித்துப்"
பின்பு இலை சருகுகளையே யுண்டு, இறுதியில் அதுவுமின்றி ஓகத்தி லமர்ந்து உடம்பு துறப்பர் என அறிக.
321. அறவினை யாதெனிற் கொல்லாமை கோறல் பிறவினை யெல்லாந் தரும்.
(இ-ரை.) அறவினை யாது எனின் கொல்லாமை - முழுநிறைவான அறச்செயல் எதுவென்று வினவின், அது ஓருயிரையுங் கொல்லாமையாம்; கோறல் பிறவினை எல்லாம் தரும் -கொலைவினை பிற தீவினைக் ளெல்லாவற்றின் பயனையும் ஒருங்கே தரும்.
கொல்லாமை எதிர்மறை யறவினை. கொல்லுதல் உடன்பாட்டுத் தீவினை. இரண்டும் தன் தன் தன்மையில் முழுநிறைவானவாம். கொல்லுதல் கொல்லாமையின் மறுதலையாதலால், பிற தீவினைப் பயனையெல்லாந் தருவதொடு நல்வினைப் பயனை யெல்லாம் அழித்துவிடு மென்பதும் பெறப்படும். ஆகவே, அத்தகைய மாபெருங் கொடுவினையைச் செய்யற்க என்பதாம்.
322. பகுத்துண்டு பல்லுயி ரோம்புத னூலோர் தொகுத்தவற்று ளெல்லாந் தலை.
(இ-ரை.) பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் - கிடைத்த வுணவை இயன்றவரை பசித்த வுயிர்கட்குப் பகுத்துக் கொடுத்துண்டு பல்வகை யுயிர்களையும் பாதுகாத்தல்; நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை - அறநூலோர் இருவகை யறத்தார்க்குந் தொகுத்த அறங்க ளெல்லாவற்றுள்ளும் தலையாயதாம்.