அறத்துப்பால் - துறவறவியல் - கொல்லாமை
199
கத்தில் தேவராகத் தோன்றி நுகரும் இன்பம். வேள்வி வேட்டல் ஆரியர் வழக்கமேயாதலாலும், அதை எதிர்ப்பவர் தமிழரேயாதலாலும், ஆரியர் தமிழர் என்னுஞ் சொற்கள் வருவித்துரைக்கப்பட்டன.
கடைக்கழகக் காலத்திலும் பின்பும் தமிழ வேந்தரும் ஆரிய வேள்வி வேட்டனரேயெனின், அவர் ஆரியப் பார்ப்பனரை நிலத்தேவ ரென்று நம்பித் தம் அறியாமையாலும் ஏமாற்றப்பட்ட நிலையிலும் செய்தமையால், அது தமிழ அறிஞரால் ஒப்புக்கொள்ளப்பட்ட தன்றென்று கூறி விடுக்க.
329. கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து.
(இ-ரை) கொலை வினையர் ஆகிய மாக்கள் - வேள்வியிலும் பிறவிடத்தும் கொலைத்தொழிலைச் செய்யும் பகுத்தறிவில்லா மாந்தர்; புன்மை தெரிவார் அகத்துப் புலைவினையர் - தம்மை மக்களுள் உயர்ந்தோராகச் சொல்லிக் கொள்ளினும் அத் தொழிலின் கீழ்மையை அறியும் அறிவுடையோர் நெஞ்சத்துப் புலைத்தொழிலோ ராவர்.
திருவள்ளுவர் கொலைத்தொழிற்கு எவ்வகைத் தவிர்ப்பும் (exem- ption) கொடாமையானும், "அவிசொரிந் தாயிரம் வேட்டலின்... - நன்று” (256) என்று ஆரிய வேள்வியைக் கண்டித்திருத்தலானும், இங்குக் 'கொலைவினை' என்பது வேள்வியையும் உளப்படுத்தியதேயாகும். கொலை வினையர் மக்கட் பண்பில்லாதவ ரென்று கருதி அவரை 'மாக்கள்' என்றார். பிறவிடங்கள் காளிக்கோட்டம் போன்ற கோயில்களும் பேய்த்தெய்வங்கட்குக் காவுகொடுக்கும் இடங்களும் ஆம். கொலைவினையைத் தொழிலாகக் கொண்டிருக்கும் பூசாரியரைக் 'கொலை வினையர்' என்றார்.
“உப்பிலிப் புழுக்கல் காட்டுட் புலைமக னுகுப்ப வேகக்
கைப்பலி யுண்டி யானும் வெள்ளின்மேற் கவிழ நீரும்
என்னும் சீவகசிந்தாமணிச் செய்யுட் பகுதியின் உரையில்,
"புலைமகனென்றார், புரோகிதனை: அவன் தன் குலத்திற்குரியன செய்யாது அரசன் குலத்திற்குரிய தொழில்களை மேற்கொண்டு நிற்றலின்; "புலைய னேவப் புன்மே லமர்ந்துண்டு" (புறம். 360) என்றும், "இழிபிறப்பினோ னீயப்பெற்று" (புறம். 336) என்றும். பிறருங் கூறினார்" என்று நச்சினார்க்கினியர் கூறியிருப்பது ஆராயத்தக்கது.