பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200

திருக்குறள்

தமிழ் மரபுரை



330. உயிருடம்பி னீக்கியா ரென்ப செயிருடம்பிற் செல்லாத்தீ வாழ்க்கை யவர்.

(இ-ரை.) செயிர் உடம்பின் செல்லாத் தீ வாழ்க்கையவர் - அருவருப்பான நோயுடம்புடன் வறுமை கூர்ந்து இழிதொழில் செய்து உயிர் வாழ்பவரை; உயிர் உடம்பின் நீக்கியார் என்ப - முற்பிறப்பில் உண்ணும் பொருட்டு உயிர்களை அவை நின்ற உடம்பினின்று நீக்கியவர் என்று சொல்வர் வினைப்பயன் அறிந்தோர்.

செல்லாமை - வாழ்க்கை நடவா வறுமை. இழிதொழில் இரந்து பிழைத்தல்.

"அக்கேபோ லங்கை யொழிய விரலழுகித்
துக்கத் தொழுநோ யெழுபவே - யக்கால்
அலவனைக் காதலித்துக் கான்முறித்துத் தின்ற
பழவினை வந்தடைந்தக் கால்”

(நாலடி.123)

என்பது செயிருடம்பிற்குக் கரணியம் (காரணம்) கூறிற்று.

அதி. 34 - நிலையாமை

அதாவது, நிலவுலகத்தில் தோன்றும் அறுவகை யுயிர்களும் பிறிதோருயிராற் கொல்லப்படா விடத்தும், எப்பருவத்தும் பிணியாலும், பிணியில்லாது வாழ்நாள் நீடினும் தத்தம் இனத்திற்குரிய காலவெல்லையில் மூப்பாலும், ஒருவகையானும் தடுக்கப்பெறாது தம்முடம்பினின்று நீங்கி நிலையாமற் போதல்.

இந் நிலையாமை நொடிப்பொழுதில் ஆயிரக்கணக்கான மறவர் போர்க்களத்திற் கொலையுண்பதால் விளங்கித் தோன்றுவதாலும், கொல்லாமை யில்லாவிடத்தும் தப்பாது நிகழும் என்பதை யுணர்த்தற்கும், கொல்லாமையின் பின் வைக்கப்பட்டது.

துன்பமிக்க உலக வாழ்வும் நிலையாது நீங்குவதாலும், அந் நீக்கமும் நிலையாது மீண்டு மீண்டும் எல்லையில்லாது பிறவி தோன்றும் என்னும் அறிவினாலும், அப் பிறவிகளுள் கீழ்ப்பிறவியொடு எரியுலகத் துன்பமும்