பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - துறவறவியல் - நிலையாமை

201



இடையிடும் என்னும் அச்சத்தாலும், உலகவாழ்க்கையில் வெறுப்புற்று இறைவன் திருவடியடைந்து துன்பமற்றதும் என்று முள்ளதுமான பேரின்பத்தைப் பெறும் முயற்சியை விரைந்து செய்யத் தூண்டுவது, நிலையாமை யுணர்ச்சியே.

331. நில்லா தவற்றை நிலையின வென்றுணரும் புல்லறி வாண்மை கடை.

(இ-ரை.) நில்லாதவற்றை நிலையின என்று உணரும் புல்லறிவாண்மை நிலையில்லாத பொருள்களையும் நிலைமைகளையும் நிலையானவை யென்று கருதும் பேதைமை; கடை - கடைப்பட்ட அறியாமையாம்.

நாள்தொறும் மாந்தர் எல்லாப் பருவத்திலும் இறக்கக்கண்டும். குறிப்பிட்ட அகவைக்கு மேற்பட்டவர் ஒருவரும் உலகத்தில் இல்லாமை யறிந்தும், இளைஞர் முதியராகவும் செல்வர் வறியராகவும் மாறுவதைப் பார்த்தும், யாக்கையும் இளமையும் செல்வமும் தமக்கு நிலைக்குமென்று கருதுவது பேதைமை யாதலால் 'புல்லறிவாண்மை' என்றும், இறுதிவரை ஒருபோதும் அறிவுபெறாமையாற் 'கடை' யென்றுங் கூறினார்.

332. கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்

போக்கு மதுவிளிந் தற்று.

(இ-ரை.) பெருஞ்செல்வம் கூத்தாட்டு அவைக்குழாத்து அற்றே - ஒருவனுக்குப் பெருஞ்செல்வஞ் சேர்வது ஆடலரங்கிற்குக் காண்போர் கூட்டம் வந்து கூடுவது போன்றதே; போக்கும் அது விளிந்த அற்று -அச்செல்வங் கெடுவதும் அவ் வாடல் முடிந்தபின் அக் கூட்டங் கலைவது போன்றதே.

எத்துணைச் செல்வமும் கெடுமென்றற்குப் 'பெருஞ்செல்வம்' என்றார். 'போக்கும்' என்னும் எச்சவும்மை வருகையைத் தழுவிற்று. பல்வேறிடங்களிலிருந்து பல்வகை மக்கள் வந்து ஆடல் முடிந்தபின் போய்விடுவது போல, பல்வேறு வழிகளில் திரண்ட பல்வகைச் செல்வமும் நல்வினைப் பயன் நீங்கினவுடன் போய்விடும் என்பது, உவமைப்பொருள் விரிவாம். ஏகாரம் தேற்றம்.

333. அற்கா வியல்பிற்றுச் செல்வ மதுபெற்றா

லற்குப வாங்கே செயல்.