உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202

திருக்குறள்

தமிழ் மரபுரை



(இ-ரை.) செல்வம் அற்கா இயல்பிற்று - செல்வம் யாரிடத்தும் நிலைக்காத தன்மையுடையது; அது பெற்றால் அற்குப ஆங்கே செயல் ஆதலால், அத்தகைய செல்வத்தை ஒருவன் பெற்றால் நிலையான பயனுள்ள அறங் களை அப்பொழுதே செய்துகொள்க.

அல்குதல் தங்குதல் அல்லது நிலைபெறுதல். அல்கா என்பது ஓசை நயம்பற்றி வலித்தது. இவ் வதிகாரமும் ஈரறத்திற்கும் பொதுவாதலால். இல்லறத்தான் செல்வம் பெறின் தனக்கு மிஞ்சியதை விருந்தோம்பல், ஒப்புரவொழுகல் முதலிய வழிகளிலும், துறவறத்தான் செல்வம் பெறின் முழுவதையும் கோயில் வழிபாடு, இலவசக் கல்வி முதலிய வழிகளிலும் செலவிட வேண்டுமென்பது கருத்து. செல்வம் பெறுவது அரிதாதலின் 'பெறின்' என்றும், யாக்கையும் செல்வமும் நிலையாதன வாதலின் செல்வத்தை உடனே பயன்படுத்த வேண்டு மென்பார் 'ஆங்கே' யென்றுங் கூறினார்.

334. நாளென வொன்றுபோற் காட்டி யுயிரீரும்

வாளது ணர்வார்ப் பெறின்.

(இ-ரை.) உயிர் - உயிரானது; நாள் என ஒன்று போல் காட்டி ஈரும் வாள் - நாள் என்று அளவிடுவதாகிய ஒரு கால அளவுபோல் தன்னைக் காட்டி வாழ்நாளைச் சமவளவான சிறுசிறு பகுதியாக அறுத்துச் செல்லும் வாளின் வாய்ப்பட்டிருப்பதாகத் தெரியும்; அது உணர்வார்ப்பெறின் - அதைக் கூர்ந் தறியும் அறிஞரிருப்பாராயின் அவருக்கு.

ஒன்றாய் நித்தமாய் மாறாததா யிருக்கும் காலம் என்னும் கருத்துப் பொருள், தானாகவன்றிக் கதிரவன் தோற்ற மறைவுகளாலேயே நாட்கூறு படுவதால், 'நாளென வொன்றுபோல்' என்றும், அது தம் வாழ்நாளை யறுக் கும் வாளென்று உணரமாட்டாதார் நமக்கு நாள் நன்றாய்க் கழிகின்ற தென்று மகிழுமாறு மயக்கலின் 'காட்டி' யென்றும், இடைவிடாது அறுத்துச் செல்லு தலின் வாளின் வாயதென்றும். அதை உணர்வார் அரியராகலின் 'பெறின்' என்றுங் கூறினார்.

"வைகலும் வைகல் வரக்கண்டு மஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்
வைகலும் வைகற்றம் வாழ்நாண்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்" (நாலடி.49

என்னும் வெண்பாவையும் நோக்குக.