உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அறத்துப்பால் - துறவறவியல் - துறவு

207


உயிரிகட்கு ஒரு தனித்த பிறவியில் உறக்கமும் விழிப்பும் மாறி மாறி வருவது போன்றே, தொடக்கமிலியாக வரும் பொது நிலைமையில் இறப்பும் பிறப்பும் மாறி மாறி வருவதும் இயல்பாம் என்பது கருத்து. ஆகவே வீடுபெறாத நிலையில், ஒரு பிறவியால் மட்டுமன்றிப் பல பிறவியாலும் நிலையாமை தோன்றி நிலைப்பதாம்.

340. புக்கி லமைந்தின்று கொல்லோ வுடம்பினுட்

டுச்சி லிருந்த வுயிர்க்கு.

(இ-ரை.) உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு - பலவேறு நோய்கட்கும் பல்வகைப் புழுக்கட்கும் வாழிடமாகிய உடம்புகளுள் நெடுகலும் ஒண்டுக் குடியிருந்தே வந்த உயிருக்கு: புக்கில் அமைந்தின்று கொல் - நிலையாக வதியத்தக்க ஓர் உறையுங் இதுகாறும் அமையவில்லை போலும்!

துஞ்சு + இல் - துச்சில் = ஒதுக்கிடம். புகு + இல் - புக்கில் = புகுந்து பின் நீங்காத நிலையான இருப்பிடம். புக்கில் அமைந்ததாயின் வெளியேறியிரா தென்பதாம். ஆகவே, உயிர் நிற்கக்கூடிய உடம்பு ஒன்றுமில்லை யென்பது பெறப்பட்டது. இங்ஙனம் இவ் வதிகாரத்தில், அரிதாய்க் கிடைத்தும் நிலையாத செல்வத்தின் நிலையாமையும் குழவிப்பருவம் முதல் கிழப்பருவம் வரை எந்நொடியிலும் திடுமென இறக்கும் யாக்கையின் நிலையாமையும், இறந்த பின்பும் எல்லையில்லாது துன்பமாலை தொடரும் பிறப்பிறப்பின் நிலையாமையுங் கூறித் துறவதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்து வைத்தார். 'ஓ' அசைநிலை; இரக்குமுமாம்.

அதி. 35 - துறவு

அதாவது இளமை, செல்வம், உடல்நலம், யாக்கை முதலியவற்றின் நிலையாமையும், எல்லையில்லாது தொடரும் பிறவித்துன்பமும் நோக்கி, துன்பமற்ற நிலையான வீடுபெறும்பொருட்டு, புறமாகிய செல்வம் என்னும் பிறிதின்கிழமைப் பொருளின்கண்ணும் அகமாகிய உடம்பு என்னும் தற்கிழமைப் பொருளின்கண்ணும் உள்ள பற்றை விடுதல். அதிகார முறையும் இதனான் விளங்கும்.

341. யாதனின் யாதனி னீங்கியா னோத

லதனி னதனி னிலன்.