பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208

திருக்குறள்

தமிழ் மரபுரை



(இ-ரை.) யாதனின் யாதனின் நீங்கியான் - ஒருவன் எவ்வெப் பொருளினின்று நீங்கினானோ; அதனின் அதனின் நோதல் இலன் - அவ்வப் பொருளால் துன்பமுறுத வில்லை.

அடுக்குத்தொடர்கள் பன்மை குறித்தன. நீங்குதல் மனத்தால் நீங்குதல், அதாவது பற்று விடுதல். பொருள்களால் வரும் இம்மைத் துன்பங்கள்.

"ஈட்டலுந் துன்பமற் றீட்டிய வொண்பொருளைக்
காத்தலு மாங்கே கடுந்துன்பம் - காத்தல்
குறைபடின் துன்பம் கெடின்துன்பம் துன்பக்
குறைபதி மற்றைப் பொருள்" (நாலடி.280)

என்பதனா லுணர்க. மறுமைத் துன்பங்கள் ஈயாமையாலும் செல்வச் செருக்காற் செய்யும் தீவினைகளாலும் வருவன. எல்லாப் பொருள்களையும் ஒருங்கே துறக்க இயலாதார் அவற்றை ஒவ்வொன்றாகத் துறக்கலா மென்றும், அவற்றைத் துறந்ததினால் இம்மையிலும் நன்மை யுண்டென்றும் கூறியவாறு.

342. வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபி

னீண்டியற் பால பல.

(இ-ரை.) துறந்தபின் ஈண்டு இயல்பால பல - எல்லாப் பொருள்களையுந் துறந்தபின் ஒருவர்க்கு இம்மையில் உண்டாகக் கூடிய நன்மைகளும் பலவாம். வேண்டின் உண்டாகத் துறக்க - அவற்றை விரும்பின் காலம் இருக்கும்படி விரைவில் துறக்க.

நன்மைகள் மனவமைதியும் நன்னெறிச்செலவும் முதலியன. நீண்ட காலத்திற்கு முன் துறந்தவன் நீண்டகாலம் அந் நன்மைகளைப் பெறுவானாதலின், 'உண்டாகத் துறக்க' என்றார். நன்மைகள் என்பதும் காலம் என்பதும் வருவிக்கப்பட்டன. துறவால் துன்பமின்மை மட்டுமன்றி இன்பமுண்மையும் உண்டாம் என்றவாறு.

343. அடல்வேண்டு மைந்தன் புலத்தை விடல்வேண்டும்

வேண்டிய வெல்லா மொருங்கு.

(இ-ரை.) ஐந்தன் புலத்தை அடல் வேண்டும் - வீடுபெற விரும்புகின்றவன் ஐம்புல இன்ப நுகர்ச்சியையுங் கெடுத்தல் வேண்டும்; வேண்டிய எல்லாம் ஒருங்கு விடல்வேண்டும் - அதன்பின் அந் நுகர்ச்சியின்பொருட்டுத்