அறத்துப்பால் - துறவறவியல் - துறவு
209
தான் தேடிவைத்திருந்த பொருள்களை யெல்லாம் ஒருங்கே விட்டுவிடுதல் வேண்டும்.
புலஇன்ப நுகர்ச்சி வீடுபேற்று முயற்சியில் மனத்தைச் செலுத்துதற்குத் தடையாதலின் அதனை 'அடல் வேண்டும்' என்றும், அந் நுகர்ச்சிக்குரிய பொருள்கள் தன்னிடமிருப்பின் அதை விட்ட மனம் மீண்டும் அவற்றின் மேற் செல்லுமாதலின் 'ஒருங்கே விடல் வேண்டும்' என்றுங் கூறினார். இதனாற் புறப்பற்று விடுதல் கூறப்பட்டது.
344. இயல்பாகு நோன்பிற்கொன் றின்மை யுடைமை
மயலாகு மற்றும் பெயர்த்து.
(இ-ரை.) ஒன்று இன்மை நோன்பிற்கு இயல்பு ஆகும் - பற்றுவைத்தற்குரிய ஒருபொருளு மில்லாமை வீடுபேற்றுத் தவத்திற்குரிய இயல்பாம்; உடைமை பெயர்த்து மயல் ஆகும் - அஃதன்றி ஏதேனும் ஒரு பொருளுடைமையும் அத் தவத்தைப் போக்கி அதனால் மீண்டும் உலக ஆசையில் மயங்குதற் கிடனாம்.
'ஒன்றும்' என்னும் இழிவுசிறப்பும்மை தொக்கது. 'மயல்' ஆகுபொருளது. ஒரேயொரு பொருளை மட்டும் வைத்துக்கொண்டு மற்றெல்லாப் பொருள்களையும் விட்டுவிடினும், விடாத பொருளின் தொடர்பால் விட்ட பொருள்கள்மேலும் ஆசை திரும்பவுண்டாகிச் செய்த தவத்தைக் கெடுத்து மனக்கலக்க முண்டாக்கும் என்பது கருத்து. முந்தின குறளில் ஒருங்கு விடல்வேண்டும் என்றதற்குக் கரணியம் (காரணம்) கூறியவாறு.
345. மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க
லுற்றார்க் குடம்பு மிகை.
(இ-ரை.)பிறப்பு அறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை - பிறப்பு நீக்கும் முயற்சியை மேற்கொண்டவர்க்கு அதை நீக்கும்வரை கருவியாக நின்று உதவும் உடம்பும் அதிகப்படியாம்; மற்றும் தொடர்ப்பாடு எவன் அங்ஙனமிருக்கவும் அதற்கு மேலும் சில வேண்டாத பொருள்களின் தொடர்பு எதற்காம்?
பிறப்பு நீக்க முயற்சிக்கு உடம்பின் துணை இன்றியமையாத தேனும், அதனால் இடையறாது பல வீழ்குழிகளும் அமைதலானும், அவற்றாற்-