பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

7


ஆண்மகன் என்னும் சொல் கணவனையும் ஆண்டகையென்னுஞ் சொல் சிறந்த தலைவனையுங் குறித்தல் போன்றே, வல்லவன் என்பதன் திரிபான வல்லப என்பதும் வடமொழியில் கண்காணிப்புத் தலைவனையும் கணவனையும் காதலனையும் நண்பனையும் முறையே குறித்ததென்க.

குடி: திருவள்ளுவர் அரசனின் முரசறை விளம்பரத் தலைவராயிருந்தாரெனின். அவர் பிறந்த குடி வள்ளுவக் குடியென்றே கொள்ளலாம். கடைக்கழகக் காலத்திற் பிராமணர் தம்மை மேன்மேலுயர்த்தத் தமிழரைப் படிப்படியாய்த் தாழ்த்தி வந்தாரெனினும், கடைப்பட்ட வகையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்கு இக்காலத்திற்போல் அக்காலத்தில் இழிவு இருந்ததில்லை. அதனால், இக்கால நிலைமைபற்றித் திருவள்ளுவரை வள்ளுவக் குடியினரென்று கொள்வது அவருக் கிழுக்காகும் என்று கருதுவது. அறியாமையின் விளைவேயாம்

"அறம்பொரு ளின்பம்வீ டென்னுமந் நான்கின்
திறந்தெரிந்து செப்பிய தேவை - மறந்தேயும்
வள்ளுவன் என்பானோர் பேதை யவன்வாய்ச்சொற்
கொள்ளா ரறிவுடை யார்”

என்று மாமூலர் பெயரிலுள்ள திருவள்ளுவமாலைப் பாவும், திருவள்ளுவரைத் தெய்வப் பிறப்பினரென்றே கொள்ளவேண்டுமென்றும், மறந்தும் மக்கட் பிறப்பினராகக் கொள்ளக்கூடாதென்றும் கூறுகின்றதேயன்றி, அவர் குடி எள்ளளவேனும் இழிவுள்ளதாகக் கருதுவதன்று.

காலம்: திருவள்ளுவர் காலம் இன்ன நூற்றாண்டென்று திட்டமாய்த் தெரியாவிடினும், தொல்காப்பியர் காலமான கி.மு. ஏழாம் நூற்றாண்டிற்கும் கடைக்கழக முடிவான மூன்றாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட தென்று கொள்வது, எவ்வகையினும் இழுக்காகாது.

கடைக்கழக முடிவிற்கு முற்பட்ட தென்பதற்குச் சான்றுகள்:

(1) "பிறர்க்கின்னா முற்பகற் செய்யின் தமக்கின்னா பிற்பகற் றாமே வரும்" (329)

என்னுங் குறள்.

"முற்பகற் செய்தான் பிறன்கேடு தன்கேடுகடும் பிற்பகற் காண்குறூஉம் பெற்றிய காண்" (21:3-4)

என்று கி.பி. 2ஆம் நூற்றாண்டினதான சிலப்பதிகார அடிகளில் அமைந்திருத்தல்.