பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

திருக்குறள்

தமிழ் மரபுரை


ளிலும் சில வடசொற்கள் புகுந்துவிட்டன. அவை அந்தம், அமரர், அவி, அன்னம், ஆகுலம், ஆசாரம், ஆதி, இந்திரன், உல்கு, கணம் (க்ஷணம்). காரணம், சலம் (வஞ்சனை) நாமம் (பெயர்). பாக்கியம், பாவம், பாவி, வித்தகர் என்னும் பதினேழே; ஆரிய வெறியர் கூறுவது போல் ஐம்பதல்ல.

அப் பதினேழேனுள்ளும் அமரர், காரணம், பாக்கியம், வித்தகர் என்னும் நான்கும் தமிழ் வேரினவே.

அல் - அ.மடி - மரி - மரர்.

கரணம் - காரணம் (வ.). கரு + அணம் - கரணம் = செய்கை, செய்கைக் கருவி. கருத்தல் செய்தல். இது ஒரு வழக்கற்ற வினை.

பகு - பக்கு - பாக்கு = பகுதி. பாக்கு - பாக்கியம் = நற்பகுதி, நற்பால், நற்பேறு.

விழித்தல் = கண்திறத்தல், பார்த்தல், அறிதல். விழி = அறிவு. விழி - விடி - விதி வித் (வ.) - வித்தக.

அதி என்பது அதை என்னும் சொல்லிற்கினமான வழக்கற்ற தமிழ் வினைச்சொல். ஆயம் என்னுஞ் சொல்லின் முதனிலையான ஆ என்பது வா என்பது திரிபு.

குணம், நிச்சம் என்னும் இரண்டும் தென்சொல்லே. கொள்ளுதல் = கொண்டிருத்தல், உடையனாயிருத்தல். கொள் - கொள்கை = இயல்பு. கொள்- கோள் = தன்மை. கொள் - கொண் - (கொணம்) - குணம் = கொண்ட தன்மை, தன்மை.

இச் சொற்கு வடவர் காட்டும் மூலம் க்ரஹ் (பற்று) என்பதே. நில் - நிற்றல் = நிலைப்பு.

"குணபத் திரன்றாள் நிற்றலும் வணங்கி” (சூடா.7:76)

நிற்றல் - நிச்சல். ஒ. நோ: முறம் - முற்றில் - முச்சில்.

“நிச்சலும் விண்ணப்பஞ் செய்ய” (திவ். திருவாய். 1:6:11)

நிச்சல் - நித்தல். "நித்தல் விழாவணி" (சிலப். உரைபெறு கட்டுரை). நில் - நிற்றம். ஒ.நோ: வெல் - வெற்றம்.

நிற்றம் - நிச்சம் - நித்தம் - நித்ய(வ.)

இன்னும் இவற்றின் விளக்கத்தை என் 'வடமொழி வரலாறு' என்னும் நூலுட் கண்டுகொள்க.